Published : 07 May 2023 04:17 AM
Last Updated : 07 May 2023 04:17 AM

ராயபுரம் உள்பட 5 ரயில்வே அச்சகங்களை மூட ரயில்வே வாரியம் உத்தரவு

சென்னை: ராயபுரம் ரயில்வே அச்சகம் உள்பட 5 ரயில்வே அச்சகங்களை நிரந்தமாக மூட ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ரயில்வேக்கு சொந்தமாக 14 அச்சுக் கூடங்கள் இருக்கின்றன. இதில், சென்னை ராயபுரம், மும்பை பைகுலா, டெல்லி சாகூர்பாஸ்டி, ஹெரா மற்றும் செகந்திரா பாத் என்று 5 இடங்களில் உள்ள அச்சகங்களை மூட ரயில்வே வாரியம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூனில் உத்தரவு பிறப்பித்தது. அப்போது, 2020-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி வரை முன்பதிவு மற்றும் முன்பதி வில்லாத டிக்கெட்கள், ஊழியர்களின் இலவச பயண பாஸ் அச்சிடுவதை தொடரலாம்.

அதன்பிறகு, சர்வதேச வங்கிசட்டம், இந்திய ரிசர்வ் வங்கிசட்டத்தை பின்பற்றும் அச்சகங்களில் பயணச் சீட்டுகளை மண்டல ரயில்வேக்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவுபடி, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதற்கிடையில், கரோனா தொற்று பரவல் காரணமாக, 5 ரயில்வே அச்சகங்களை மூடுவதை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை ஒத்திவைத்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.

இதன் பிறகு, சில அச்சகங்கள் டிக்கெட் அச்சிடும் பணிகளை முடிக்காத நிலை மற்றும் நிர்வாக காரணங்கள் ஆகிய வற்றால் இந்த ரயில்வே அச்சகங்கள் மூடுவது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ராயபுரம் ரயில்வே அச்சகம் உள்பட 5 ரயில்வே அச்சகங்கள் நிரந்தரமாக மூட ரயில்வே வாரியம் கடந்த 3-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இந்த அச்சகங்கள் மூடல் நடைமுறையை ரயில்வே வாரியம் பட்டியலிட்டு, அனைத்து இயந்திரங்கள் மற்றும் பிற பொருட்களை ரயில்வேக்கு அதிகபட்ச வருவாயைக் கொண்டு வரும் வகையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், ரயில்வேயின் உச்ச அமைப்பும் ஊழியர்களை உரிய முறையில் பணியமர்த்த வேண்டும் என்றும், நிலத்தை லாபகரமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. காகித மில்லா பயணச்சீட்டு முறையை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ரயில்வேக்கு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x