Published : 07 May 2023 04:47 AM
Last Updated : 07 May 2023 04:47 AM

ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியப் பயன்கள் - தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை மலர், காணொலி குறுந்தகடு வெளியீடு

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், திமுக அரசின் 2 ஆண்டு நிறைவையொட்டி செய்தி, மக்கள் தொடர்பு துறை தயாரித்துள்ள காலப்பேழை புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச் செயலர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர்.படம்: பு.க.பிரவீன்

சென்னை: திமுக அரசின் 2 ஆண்டு நிறைவையொட்டி, சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 1 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியப் பயன்களுக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 2 ஆண்டு சாதனை மலரையும் வெளியிட்டார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார்.

பின்னர், கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்ற 2 ஆண்டு சாதனை மலரையும், சாதனைகளை விளக்கும் தொகுப்பு காணொலி குறுந்தகட்டையும், ‘பென்னிங் டவுன் சேஞ்ச்’ என்ற ஆங்கில காலப்பேழை புத்தகத்தையும் முதல்வர் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து, 1 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கும் அடையாளமாக, 10 பயனாளிகளுக்கு ஓய்வூதியத்துக்கான ஆணைகளையும், ‘புதுமைப் பெண்’ திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளையும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பயன்பெற்றவர்களை பாராட்டி கேடயங்களையும் முதல்வர் வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது:

2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தமிழக மக்களாகிய உங்கள் அன்போடும், ஆதரவோடும் முதல்வர் பொறுப்பில், தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன். மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டபோது, என் மனதுக்கு தெம்பும் தைரியமும் கொடுத்தவர்கள் 3 பேர். பெரியார், அண்ணா, கலைஞர். இவர்கள் மூவரையும் மனதில் நினைத்துப் பார்த்தேன். அவர்களோடு அம்பேத்கர், காமராஜர், ஜீவானந்தம், காயிதே மில்லத் உள்ளிட்டோரும் என் மனதில் தோன்றினார்கள். ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றிக் காட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் தானாக எனக்கு வந்துவிட்டது.

என்னால் முடிந்த அளவுக்கு, ஓய்வின்றி,என் சக்திக்கு மீறி பணியாற்றுகிறேன். அந்த உழைப்பின் பயனை தமிழக மக்களான உங்கள் முகங்களில் பார்க்கிறேன். திராவிடமாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை. உங்கள் மகிழ்ச்சியும், புன்னகையுமே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிறது திருக்குறள். எல்லோருக்கும் எல்லாம்என்பது திராவிட மாடல். சாதி, மதம், அதிகாரம், ஆணவத்தால் மக்களை பிரித்துப் பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது. மக்களுக்குசம்பந்தம் இல்லாத பதவியில் இருப்பவர்களை பற்றி கவலைப்பட அவசியம் இல்லை. தமிழகத்தில் வாழும் 8 கோடி மக்களும் ஏதாவது ஒரு விதத்தில் நன்மையை அடைந்திருக்கும் ஆட்சியாக நமது திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது.

350-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கூட்டம்: தலைமைச் செயலகத்தில் என் தலைமையில் இதுநாள் வரை 350-க்கும் மேற்பட்ட துறைரீதியான ஆய்வுக் கூட்டங்கள் நடந்து, பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இதுநாள் வரை 6,905 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். கோட்டையில் தீட்டும் திட்டங்கள் கடைகோடி மனிதருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்த ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடங்கி இதுவரை 4 கட்டங்களில், 16 மாவட்டங்களில் ஆய்வு நடத்தியிருக்கிறேன்.

கடந்த ஆட்சியில் சீரழிந்து கிடந்த நிர்வாகத்தை சரிசெய்து, இருண்டு கிடந்த தமிழகத்தில் விடியலை உண்டாக்கியிருக்கிறோம். மத்திய அரசிடம் இருந்து தமிழக உரிமைகளை காப்பாற்ற இயன்றதை எல்லாம் செய்கிறோம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக, வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்றநம்பிக்கை அதிகமாக இருக்கிறது.

கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற உழைப்பேன். உங்களில் ஒருவனாக, உங்களோடு ஒருவனாக என்றும் இருப்பேன். ஆட்சியின் 5 ஆண்டும்உங்கள் நலனுக்கானதாக இருக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன், ரகுபதி, கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா,துணை மேயர் மகேஷ் குமார், தலைமைச்செயலர் இறையன்பு, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசுத் துறை செயலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x