Published : 13 Dec 2024 01:30 PM
Last Updated : 13 Dec 2024 01:30 PM
திண்டுக்கல்: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் அமெரிக்க அதிபரை போல குடியரசு தலைவர் ஆகிவிட வேண்டும், என பிரதமர் நினைக்கிறார் என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான வழக்கில் ஆஜராக வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய பிரச்சினை ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பிரச்சினை. இது நடைமுறையில் சாத்தியமற்றது. எந்த ஜனநாயக நாட்டிலும் ஒரே தேர்தல் என்பது கிடையாது.
மூன்று மாநில அரசுகள் கவிழ்ந்து விட்டது என்றால், அடுத்த ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? இது எப்படி சாத்தியம். இதில் உள்ளாட்சி தேர்தலையும் நடத்துகிறார்களாம். உள்ளத்தில் ஏதோ ஒன்றை நினைத்துகொண்டு இதை அறிவித்துள்ளார் என இந்திய பிரதமரை குற்றம் சாட்டுகிறேன். பிரதமர் பதவி வேண்டாம் அமெரிக்கா அதிபரை போல குடியரசு தலைவர் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணம் பிரதமருக்கு உள்ளது. இந்த நாடு மதசார்பற்ற தன்மையாக இருந்தால் தான் ஒற்றுமை ஓங்கும்.
பொது சிவில் சட்டத்தை எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றியவர்கள் இவர்கள். ஹிட்லர், முசோலினி, இடி அமீன் போன்ற மனப்பான்மை பிரதமரிடம் உள்ளது.‘ஒரே நாடு ஒரே தேர்தலை’ எதிர்க்க மக்களுடன் இணைந்து போராடவேண்டும். வாரணாசியில் நடந்த சனாதன மாநாட்டில் இந்தியா என அழைக்கக் கூடாது பாரத் என்றே அழைக்க வேண்டும். தலைநகரை வாரணாசிக்கு மாற்றவேண்டும். முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு ஓட்டுரிமை கூடாது என தீர்மானம் நிறைவேற்றயுள்ளனர். இது தான் அவர்களின் நோக்கம்.
வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு இங்கு ஒரு ஆளுநர் இருக்கிறார். மத்திய அரசுக்கு ஏஜெண்டாக செயல்படுகிறார்.
உலக செஸ் சாம்பியனாக வெற்றி பெற்ற குகேஷுக்கு வாழ்த்துக்கள். வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. குஜராத், பிஹார் என்றால் ஓடிச்சென்று உதவுகிறார்கள். தமிழக மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகும் போது உதவ முன் வருவதில்லை. அவர்கள் இந்தியர்கள் இல்லையா.
சர்வாதிகார மனப்பான்மை கொண்டுள்ள நரேந்திர மோடி மக்களால் தூக்கி எறியப்படுவீர்கள். ஒரே நாடு ஒரே தேர்தலில் முறைகேடுகள் நடக்கும். திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT