Published : 13 Dec 2024 12:30 AM
Last Updated : 13 Dec 2024 12:30 AM
கும்பகோணம்: நூற்றாண்டு கொண்டாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்தி, நிராகரிக்கப்பட முடியாத சக்தியாக உருவாக்குவோம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழு கூட்டம் கடந்த 10-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, மூ.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் வை.சிவபுண்ணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா வரும் 26-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. அப்போது தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் கட்சிக் கொடியேற்றுவது, ஒரு கோடி பனை விதைகள் நடுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஜன.26-ல் தருமபுரியில் பேரணி: அனைவருக்கும் இலவசக் கல்வி, வேலை வழங்கக் கோரி வரும் ஜனவரி 26-ம் தேதி தருமபுரியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை ஜனநாயக முறைப்படி நடத்துவதற்கு போலீஸார் அனுமதி மறுக்கின்றனர். அவர்களிடம் அனுமதி பெறுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். கும்பகோணத்தை தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை, தமிழர் திருநாளான வரும் பொங்கல் பண்டிகையன்று முதல்வர் அறிவிக்க வேண்டும். அறிவிப்பார் என நம்புகிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கட்சியை மேலும் பலப்படுத்தி, பலம் பொருந்திய கட்சியாக, நிராகரிக்கப்பட முடியாத சக்தியாக உருவாக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT