Last Updated : 13 Dec, 2024 01:37 PM

18  

Published : 13 Dec 2024 01:37 PM
Last Updated : 13 Dec 2024 01:37 PM

“எந்த கொம்பன் வந்தாலும் கனிமம் எடுக்க விடமாட்டேன்” - அரிட்டாபட்டியில்  சீமான் ஆவேசம் 

மதுரை அரிட்டாப்பட்டியில் பொதுமக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

மதுரை: அரிட்டாபட்டியில் எந்த கொம்பன் வந்தாலும் கனிமம் எடுக்க விடமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: அரிட்டாபட்டியில் 5 ஆயிரம் ஏக்கர் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், அது 38 ஆயிரத்து 450 ஏக்கர் வரை எடுக்கப்படவுள்ளது தெரியவந்துள்ளது. ஒரு போர் நடந்த பிறகு கூட மக்களை குடி பெயர்த்து விடலாம். ஆனால் நிலக்கரி, மீத்தேன், டங்ஸ்டன் என கனிமம் எடுக்கப்பட்ட இடங்களில் மக்களை குடி பெயர்ப்பது என்பது வாய்ப்பே இல்லை.

இதனால் சொந்த நாட்டுக்குள்ளேயே அகதியாக மாறும் நிலை நேரிடும். மண்ணின் வளங்கள் மக்களுக்கானது, தனிப்பட்ட முதலாளிகளுக்காக மாற்றி நிறுவுகிறார்கள். மண்ணெண்ணெய் தான் எடுக்கப் போகிறோம் என கூறிவிட்டு மீத்தேன் எடுக்க வயல்களில் தோண்டினர். அப்பறம் பற்றி எரிந்த போது தான் பேராபத்து என என் மக்கள் உணர்ந்தனர். நாடெங்கும் நடந்த போராட்டங்களில் நின்று போராடியவன் நான் தான். அன்று வெள்ளைக்காரனுக்கு ஒரு பிடி மண்ணை கூட தர முடியாது என போராடிய மான மறவர்கள் பேரனும் பேத்திகளும் இந்த கொல்லைகாரர்களுக்கு ஒரு பிடி மண்ணை தொடக் விடக்கூடாது என உறுதியோடு போராட வேண்டும்.

என்னை தாண்டித்தான் என் தாய் நிலத்தின் ஒருபிடி மண்ணை கூட தொட முடியும். நான் ஓட்டுக்காக அல்ல வாழுகின்ற இந்த நாட்டுக்காக இருக்கிறேன். வேதாந்தா, அணில் அகர்வால் யார் வந்தாலும் இங்கு ஒரு கல்லை கூட எடுக்க முடியாது. மேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை, நீதிமன்றம் அனுமதி தரவில்லை. அதைப்பற்றி நான் கவலையும் கொள்ளவில்லை. நான் கேட்டது போராட அனுமதி. பாதுகாப்பு இல்லை. நான் தான் நாட்டுக்கே பாதுகாப்பு எனக்கு எதற்கு பாதுகாப்பு.

தாய் நிலத்தை எதற்காகவும் விட்டு கொடுக்க கூடாது. அச்சப்படுவது, பயப்படுவது இதைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள். வழக்கு இல்லையென்றால் விடியாது கிழக்கு. உங்கள் முன்னால் நிற்கும் மகன் என் மீது 150 வழக்குகள் உள்ளன. இது கொள்ளை, கொலை செய்தற்காக கிடைத்தது அல்ல, போராட்டம் நடத்தியதற்காக பதிவு செய்யப்பட்டவை. இன்று பேசியதற்கு கூட வழக்கு போடலாம் அதையும் வாங்கி பையில் வைத்துக் கொள்வேன். தமிழக அரசியலில் பல காவல் நிலையங்களில் அதிகமான கையெழுத்து போட்டது நான் தான். எந்த கொம்பன் ஆனாலும் இங்கு கனிமம் எடுக்க போவதில்லை. நீங்களே விடு சீமான் எடுத்துவிட்டு போகட்டும் என்று சொன்னாலும் நான் விடுவதாக இல்லை. இவ்வாறு சீமான் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x