

நிகழும் விசுவாவசு வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி வியாழக்கிழமை, சுக்லபட்சத்து துவாதசி திதி, கார்த்திகை நட்சத்திரம், சுபம் நாமயோகம், பாலவம் நாமகரணம், கன்னி லக்னத்தில், அமிர்த யோகத்தில், நேந்திரம் 2, ஜீவன் -1 நிறைந்திருக்க, பஞ்சபட்சியில் வல்லாறு வலுவிழந்த நேரத்தில் 2026-ம் ஆண்டு பிறக்கிறது.
வைராக்கிய கிரகமான செவ்வாயின் ஆதிக்கத்தில் இருந்து வந்த 2025-ம் (2+0+2+5=9) ஆண்டு உலகெங்கும் புரட்சிகளையும், பலவிதமான போராட்டங்களையும், நிம்மதியற்ற நிலை யையும் தந்தது. ஒருபக்கம் அடக்கு முறைகள் அதிகமானபோதிலும், மறுபக்கம் குற்றச் செயல்களும், போதை வஸ்துகளால் பாதிப்புகளும் ஏற்பட்டன.
சுபிட்ச கிரகமான சுக்ரனின் ராசியில் இந்த 2026-ம் ஆண்டு பிறப்பதால் உலகெங்கும் அமைதி திரும்பும். மக்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புவார்கள். ரிஷப ராசியில் வருடம் உதித்திருப்பதால் மக்களி டையே சோம்பல் விலகும். அதிகம் உழைப்பார்கள். சொந்த வீடு, வாகனம் பலருக்கும் அமையும். விவசாயிகள் நவீன முறையில் பயிர்சாகுபடி செய்வார்கள். சிறுதானியங்கள், மூலிகை கள், கீரை வகைகள் மற்றும் மரப்பயிர்களால் அதிக ஆதாயமடைவார்கள். பயிர் காப்பீட்டு முறையால் இழப்பை ஈடுகட்டுவார்கள். பால் உற்பத்தி அதிகரிக்கும். துணிகளின் விலை குறையும். டிவி, கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன்களின் பயன்பாடு அதிகரிக்கும்.
எண் ஜோதிடப்படி (2+0+2+6=10=1) ராஜ கிரகமான சூரியனின் ஒன்றாம் எண்ணின் ஆதிக்கத்திலும், ஆயுத நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரத்திலும் இந்த வருடம் பிறப்பதால், நாட்டை ஆள்பவர்கள் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவார்கள். நவீன ஆயுதங்களையும், ஏவுகணைகளையும், ட்ரோன்களையும், எந்திர மனிதர்களையும் வாங்கிக் குவிப்பார்கள். இந்தியா ராணுவத்துக்கு அதிக நிதியை ஒதுக்கும். புதிய நீர்மூழ்கி கப்பல்கள், பீரங்கி டாங்கிகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் உருவாக்கும். ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பான அதிநவீன ஆடைகள் அளிக்கப்படும். அண்டை நாடுகள், நம்மை குறி வைத்தாலும், அதற்கு தகுந்த பதிலடியும் உடனே தரப்படும். ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரும். சீனா மற்றும் இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்கும்.
ஒரே வருடத்தில் குரு பகவான் மிதுனம், கடகம், சிம்மம் என மூன்று ராசிகளில் பயணிப்பதால் டாலருக்கு மாற்றாக புதிய பணம் நடைமுறைக்கு வரும். வர்த்தகப் போர் அதிகரிக்கும். அமெரிக்காவின் அடக்குமுறை குறையும். கரோனா போன்ற புதிய வகை நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும். வெள்ளியின் விலையும் போட்டிப் போட்டு அதிகரிக்கும். குரு பகவான் 3 முறை பெயர்ச்சி அடைவதால் மக்கள் ஜனவரி முதல் மே மாதம் வரை நிதானமாகவும், ஜூன் மாதம் முதல் அக். 14-ம் தேதி வரை சாதிக்க வேண்டுமென்ற வைராக்கியத்துடனும், அக்.14-ம் தேதி முதல் டிசம்பர் வரை சேமிக்க வேண்டுமென்ற மனநிலை யுடனும் இருப்பார்கள். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படும். நீதிபதிகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கட்டுப்படுத்த புது சட்டங்கள் வரும். எல்லை பாதுகாப்பு அதிகரிக்கும். குறுக்கு வழியில் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
சூரியனின் நட்சத்திரத்தில் சூரியனின் எண்ணில் இந்த ஆண்டு பிறந்திருப்பதால் மருத்துவத் துறையில் பல சாதனைகள் நிகழ்த்தப்படும். புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். சில நுணுக்கமான அறுவை சிகிச்சைகளுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படும். புற்றுநோய் மற்றும் நீரழிவு நோய்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்.
தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகள் பொருளாதார வீழ்ச்சிகளை சந்திக்கும். மே மாதம் வரை சனிபகவானுக்கு 4-ல் குருபகவான் நீடிப்பதால் வங்கிகளில் நூதனமுறையில் மோசடிகள் அதிகரிக்கும். கடன்களை வசூலிக்க சட்டங்கள் கடுமையாக்கப்படும். பண வீக்கம் அதிகமானாலும், மத்திய அரசின் பெரும் முயற்சியால் சரிசெய்யப்படும். மே மாதம் வரை திரைத்துறை ராசியான துலாவை குருபகவான் பார்ப்பதால் சினிமா வளர்ச்சியடையும். புதிய கலைஞர்கள் புகழடைவார்கள். திரைத்துறை சார்ந்த வர்கள் அரசியலில் விஸ்வரூபம் எடுப்பார்கள். அவர்களால் ஆட்சி அதிகாரங்கள் மாறும். ஆட்சி அதி காரத்தில் அமருவதற்கு உலகெங்கும் போட்டிகள் அதிகரிக்கும். சுழற்சி முறையில் பதவிகள் பகிர்ந்தளிக்கப் படும். மனசாட்சிக்கு அப்பாற்பட்ட சம்பவங்கள் அரசியலில் நிகழும்.துலாம்
இந்த வருடம் முழுவதும் சனிபகவான் மீனத்திலேயே அமர்ந்திருப்பதால் கடலில் கப்பல்கள் மூழ்கடிக்கப்படும். பெட்ரோல் டீசல், காஸ் சிலிண்டர் விலை குறையும். பூமிக்கடியில் புதிய பெட்ரோல், டீசல் படுகைகள் கண்டுபிடிக்கப்படும். சனிபகவானுக்கு பன்னிரண்டாம் இடத்தில் ராகு இருப்பதால் விமான விபத்துகள் மற்றும் கடல் கொள்ளைகள் அதிகரிக்கும். ஜப்பான் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி பாதிப்புகள் அதிகரிக்கும். கும்ப ராசிக்கு இரண்டாம் இடத்திலேயே சனிபகவான் அமர்ந்திருப்பதால் எரிமலைகள் வெடிக்கும். மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் விளையாட்டு, அரசியல் உள்ளிட்ட துறைகளில் சாதித்துக் காட்டுவார்கள்.
வருடப்பிறப்பு லக்னத்துக்கு ஆறாம் இடத்தில் ராகு இருப்பதால் தொழில்துறை வளர்ச்சி அடையும். பொருளாதாரம் மேம்படும். பன்னிரெண்டாம் இடத்தில் கேது இருப்பதால் ஆன்மிகத்தலங்கள், மழை வெள்ளத்தால் பாதிப்படையும். கலவரம்,
ஊர்வலம் உண்ணாவிரதம் ஆகியவை கட்டுப்படுத்தப்படும். விண்வெளியில் இயற்கை வளங்களை கண்டறியவும், பாதுகாப்புகளை அதிகப்படுத்தவும் நவீன செயற்கைக் கோள்கள் ஏவப்படும். வான்வெளியில் யுத்தங்கள் ஏற்படலாம். நீதித் துறையில் இருக்கும் சில தவறுகள் கண்டுபிடிக்கப்படும்.
லக்னத்துக்கு 4-ம் வீட்டில் புதனுடன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் மூன்று கிரகங்கள் சேர்ந்திருப்பதால் கல்வித் துறை வளர்ச்சி அடையும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். செயற்கை நுண்ணறிவு (AI), அக்கவுண்ட்ஸ், சட்டம், சைபர் கிரைம், மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்புகள் பிரபலமாகும்.
வருடப்பிறப்பு லக்னமான கன்னி லக்னத்தை சனிபகவான் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே இருப்பதால் மக்களிடையே போர் மற்றும் நோய் பயம் அதிகரிக்கும். பாதுகாப்பும் ஆரோக்கிய மும் இருந்தால் போதும் என்ற அளவுக்கு சூழ்நிலைகள் உருவாகும். கன்னி ராசியை சனிபகவான் பார்ப்ப தால் மென்பொருள் துறையில் வேலை வாய்ப்புகள் குறையும்.
செயற்கை நுண்ணறிவால் உண்மைக்கு புறம்பான விஷயங்கள் திரிக்கப்படும். பொய்மையான விஷயங்கள் வளர்ச்சி அடையும். வருடம் பிறக்கும்போது செவ்வாய் வலுத்துக் காணப்படுவதால் விளையாட்டுத் துறை வளர்ச்சி அடையும் உலகெங்கும் இந்திய வீரர்கள் சாதித்துக் காட்டுவார்கள். இந்த 2026-ம் ஆண்டு கடந்த ஆண்டை விட மக்களிடையே விழிப்புணர்வையும், சமயோஜித புத்தியையும் தருவதாக அமையும்.