

எங்கும் எப்போதும் புரட்சியுடன், புதுமையையும் புகுத்திப் பார்க்கும் நீங்கள் உழைப்பால் உயரும் உத்த மர்கள். மூளையையே மூலதனமாக கொண்டு முன்னேறுபவர்கள்.
உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் மறைமுக எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். அலைபாய்ந்த மனது இனி அமைதியாகும். மனதில் இருந்து வந்த பயம் நீங்கும். கம்பீரமாக பேசுவீர்கள். பணப்புழக்கம் பல வகைகளில் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். பங்காளிப் பிரச்சினைகள் ஓயும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். வெளிப்படையாக பேசுவதாக நினைத்து யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்.
1.1.2026 முதல் 31.5.2026 வரை குரு பக வான் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்பதால் எந்த வேலையும் இழுபறியாகி முடியும். அரச சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்களும், வதந்திகளும் பரவும். 1.6.2026 முதல் 14.10.2026 வரை குருபகவான் லாப ஸ்தானத்துக்குள் வருவதால் வராமலிருந்த பணம் தடையின்றி வரும். பொன், பொருள் சேரும். நவீன எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்குவீர்கள்.
14.10.2026 முதல் 31.12.2026 வரை குரு பகவான் ராசிக்கு 12-ம் வீட்டுக்கு செல்வதால் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். கையிருப்பு கரையக் கூடும்.
5.2.2026 முதல் 1.3.2026 வரை 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைவதால் வாகனப்பழுது ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். 11.5.2026 முதல் 20.6.2026 வரை 8-ம் வீட்டில் செவ்வாய் மறைவதால், சிறு சிறு விபத்துகள், பொருள் இழப்புகள் ஏற்படும்.
இந்த வருடம் முழுவதும் கண்டகச்சனி தொடர்வதால் முன்கோபத்தை குறை யுங்கள். திடீர் முடிவுகள் வேண்டாம். டிச. 4-ம் தேதி வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் கேது நிற்பதால் காரியத் தடைகள், விரயச் செலவுகள் வரக்கூடும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். 6-ம் வீட்டில் ராகு நிற்பதால் வழக்கில் வெற்றியுண்டு. தடைபட்ட வேலைகள் முடியும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். டிச.5-ம் தேதி முதல் கேது 11-ம் வீடான லாப வீட்டுக்கு வருவதால் சொந்தமாக வீடு, மனை வாங்குவீர்கள். பழையக் கடன் தீரும். ராகு 5-ம் வீட்டுக்கு வருவதால் சாதுர்யமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை பயக்கும்.
இல்லத்தரசிகளே! குடும்ப விஷயங்களை எல்லோரிடமும் சொல்ல வேண்டாம். கன்னிப் பெண்களுக்கு தடைபட்ட கல்லூரிப் படிப்பைத் தொடரும் வாய்ப்பு உண்டு. மாணவ-மாணவிகளுக்கு தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
வியாபாரத்தில் ஜூன் மாதத்திலிருந்து தள்ளிப்போன பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். பழைய சரக்குகளை விற்றுத் தீர்க்க நவீன யுக்திகளை கையாளுவீர்கள். வருட இறுதியில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். ஹோட்டல், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்கு தாரர்களுடன் இணக்க மாக செயல்படவும்.
உத்தியோகத்தில் மே மாதம் வரை வேலைச் சுமை இருக்கும். உங்களின் தகுதிக்கேற்ப சம்பளம் உயரும். மேலதிகாரி உங்களை புரிந்து கொள்வார். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். கணினி துறையினருக்கு, இழந்த சலுகைகள் மீண்டும் கிடைக்கும். வெளிமாநிலங்களிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். மூத்த கலைஞர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வெற்றி கிட்டும்.
மொத்தத்தில் இந்த 2026-ம் ஆண்டு, ஒரு பக்கம் சலசலப்புகளையும், சங்கடங்களையும் தந்தாலும் மறுபக்கம் சந்தோஷத்தையும் தருவ தாக அமையும்.
பரிகாரம்: திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 16 கி.மீ தூரத்தில் சேரன் மகாதேவியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மிளகு பிள்ளையாரை அருகம்புல் மாலை அணிவித்து வணங்குங்கள். அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.