

மனதில் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசும் நீங்கள், பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்வீர்கள்.
உங்கள் ராசிக்கு 4-ல் சந்திரன் நிற்கும்போது இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் பொருளாதாரம் உயரும். செல்வாக்கு கூடும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு வருமானம் உயரும். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப் போய்க் கொண்டிருந்த மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி வெகு விமரிசையாக நடத்திக் காட்டுவீர்கள்.
மகனுக்கு வெளிநாட்டில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிமாநிலங்களில் உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு அமையும். வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிட்டும். பங்காளிப் பிரச்சினை முடிவுக்கு வரும். அடிக்கடி தொல்லை கொடுத்து வந்த வண்டியை மாற்றிவிட்டு புதிய வாகனத்தில் பயணிப்பீர்கள். இனி ஓரளவு வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். தெலுங்கு, இந்தி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். நீண்டநாட்களாக போக நினைத்தும் போக முடியாமல் போன புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
1.1.2026 முதல் 31.5.2026 வரை குருபகவான் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் புது சொத்து வாங்குவீர்கள். உடல் நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். 1.6.2026 முதல் 14.10.2026 வரை குருபகவான் ராசிக்கு 6-ம் வீட்டுக்கு வருவதால் தந்தையாருக்கு உடல் நலம் பாதிக்கும். அரசு காரியங்கள் தடைபடும். 14.10.2026 முதல் 31.12.2026 வரை குருபகவான் ராசிக்கு 7-ம் வீட்டுக்கு செல்வதால் வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.
வருடம் முழுவதும் சனிபகவான் ராசிக்கு 2-ம் வீட்டில் நிற்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. சாதுர்யமாகப் பேசி சில வேலைகளை முடிக்கப் பாருங்கள். யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம்.
டிச.4-ம் தேதி வரை ஜென்ம ராகுவாக இருப்பதால் மனப் போராட்டங்கள் அதிகரிக்கும். சில சமயங்களில் எதிர்காலத்தைப் பற்றிய பயம் வரும். கேது ராசிக்கு 7-ம் வீட்டில் நிற்பதால் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.
டிச. 5-ம் தேதி முதல் ராகு 12-ம் வீட்டுக்கு செல்வதால் விரயச் செலவுகள் அதிகரிக்கும். கழுத்து வலி, முதுகு வலியால் அவதிப்படுவீர்கள். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். கேது 6-ம் வீட்டுக்கு வருவதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இரண்டு தலைமுறைகளாக சந்திக்காத உறவினர்களை சந்திப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.
இல்லத்தரசிகளுக்கு ஆடை, ஆபரணங்கள் சேரும். கணவரின் அன்பு அதிகரிக்கும். சிலர் பழைய தங்கத்தை கொடுத்துவிட்டு புது டிசைனில் நகைகள் வாங்குவீர்கள். புகுந்த வீட்டில், பிறந்த வீட்டின் பெருமையை பேசிக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களுக்கு தடைபட்ட கல்யாணம் கைகூடி வரும். கனவுத்தொல்லை, தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். மாணவ - மாணவிகளுக்கு உயர்கல்வியில் வெற்றியுண்டு. ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள். சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும்.
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். சிலர் புதிய கிளைகள் தொடங்க வாய்ப்பு உண்டு. வேலையாட்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது டீலர்ஷிப், ஏஜென்ஸி எடுப்பீர்கள். இரும்பு, உணவு வகைகள், எண்ணெய் வகைகளால் லாபமீட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் அவ்வப்போது போட்டிகள் இருந்தாலும் அதையெல்லாம் நினைத்து கவலைப்படாமல் லாபத்தை ஈட்டுவீர்கள்.
உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொந்தரவு தந்த அதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். எதிர்பார்த்த சம்பள உயர்வு, சலுகைகள் கிடைக்கும். உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கணினி துறையினருக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலைகளும் தேடி வரும்.
கலைத்துறையினருக்கு பழைய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் வரக்கூடும். எதையும் தட்டிக் கழிக்க வேண்டாம். உங்களின் படைப்புகள் வெளிப்படும். எழுத்து, நடிப்பு ஆகிய துறைகளில் வெற்றி கிட்டும்.
மொத்தத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு, சவால்களை சாமர்த்திய மாக கையாண்டு, சாதிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம் : சிதம்பரத்திலிருந்து 15 கிமீ தூரத்தில் கிள்ளை அருகே அமைந்துள்ள ஸ்ரீபுற்றுமாரியம்மன் கோயிலில் வெள்ளிக் கிழமையில் நெய் தீபம் ஏற்றி, தானியங்களை காணிக்கையாகக் கொடுத்து வணங்குங்கள். எதிலும் வெற்றி கிட்டும்.