மீனம் ராசியினருக்கான 2026 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்

மீனம் ராசியினருக்கான 2026 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்
Updated on
2 min read

அரண்மனையில் காவலனாக இருப்பதைக் காட்டிலும், குப்பத்தில் தலைவனாக இருப்பதே மேல் என சுய கௌரவம் உடையவர்கள் நீங்கள்தான்.

உங்கள் ராசிக்கு 3-வது ராசியில் சந்திரன் நிற்கும்போது இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் மனதில் உற்சாகம் பொங்கும். புது முடிவுகளை எடுத்து சுற்றியிருப்பவர்களை ஆச்சர்யப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உங்களின் தோற்றப் பொலிவு கூடும்.

குடும்பத்தில் உங்களை அலட்சியமாக பார்த்த நிலை மாறும். சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். மகளுக்கு வயதாகிக் கொண்டு போகிறதே என்று கவலைப்பட்ட நிலை மாறும். நல்ல இடத்தில் வரன் அமைந்து சொந்த பந்தங்கள் மெச்சும்படி திருமணத்தை முடிப்பீர்கள். குழந்தை இல்லாத தம்பதிக்கு வாரிசு உருவாகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இளைய சகோதரர்கள் உதவுவார்கள்.

1.1.2026 முதல் 31.5.2026 வரை குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் நிற்பதால் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். அம்மாவின் ஆரோக்கியம் பாதிக்கும். 1.6.2026 முதல் 14.10.2026 வரை குருபகவான் ராசிக்கு 5-ம் வீட்டுக்கு செல்வதால் பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

14.10.2026 முதல் 31.12.2026 வரை குருபகவான் ராசிக்கு 6-ம் வீட்டுக்கு செல்வதால் சிலர் வீடு மாறுவீர்கள். வாகனப் பழுது நீங்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த சொத்து வழக்குகள் முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் ஆகியவற்றை நல்ல விலைக்கு விற்பீர்கள்.

வெகுநாட்களாக நினைத்துக் கொண்டிருந்த அனைத்தும் நிறைவேறும். புதிய கார் வாங்குவீர்கள். சொந்த ஊரில் மதிப்பு கூடும். அண்டை அயலாரிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். அவர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்திக் கொடுப்பீர்கள்.

டிச.4-ம் தேதி வரை கேது 6-ம் வீட்டில் நிற்பதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். தந்தையாருக்கு உடல்நிலை பாதிக்கும். ராகு 12-ம் வீட்டில் நிற்பதால் வீண் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். வருங்காலத்தை பற்றிய கவலைகள் தோன்றும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

டிச. 5-ம் தேதி முதல் கேது 5-ம் வீட்டுக்கு வருவதால் பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். பூர்வீகச் சொத்து விஷயமாக அலைய வேண்டாம். ராகு உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவதால் ஷேர் மூலம் பணம் வரும். கொடுத்து ஏமாந்துபோன தொகையில் ஒரு பகுதி கிடைக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மகளின்

திருமணம் கைகூடி வரும். மகனுக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களில் படிக்கும் வாய்ப்பு அமையும். இல்லத்தரசிகளுக்கு மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தினர் அனைவரும் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். கன்னிப் பெண்களுக்கு கல்லூரி படிப்பில் இருந்து வந்த தடைகள் உடைபடும். எதிர்பார்த்தபடியே நல்ல வாழ்க்கைத் துணை அமையும். மாணவ – மாணவிகள் தூக்கத்தை தவிர்த்து படிப்பில் அக்கறைக் காட்ட வேண்டும். பெற்றோர், ஆசிரியர் என அனைவரின் அன்பையும் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபமீட்டுவீர்கள். எதிர்பார்த்த வகையில் கடனுதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை வசீகரிக்க கடையை விரிவுபடுத்தி, நவீன விளக்குகளால் அலங்கரிப்பீர்கள். புதிய யுக்திகளைக் கையாண்டும், சலுகைகளை அறிவித்தும் பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்.

சந்தை நிலவரத்தை அறிந்து சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். இரும்பு, கடல் சார்ந்த உணவு வகைகள், கட்டிட உதிரி பாகங்கள், ரசாயன வகைகள் மூலம் லாபம் ஈட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகளை அலைந்து திரிந்து வசூலிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் மனஸ்தாபங்கள் வரக்கூடும்.

உத்தியோகத்தில் திடீர் முன்னேற்றம் உண்டாகும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்ததற்கு பலன் கிடைக்கும். இனி சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்களும் நெருங்கி வந்து பேசுவார்கள். அவர்களிடம் சொந்த விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

அடுத்தவர் விஷயத்திலும் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் ஒன்று கேட்கப் போய், அது வேறு விதமாக புரிந்து கொள்ளப்படும். அதனால் பேச்சில் கவனம் இருக்கட்டும். கணினித் துறையினருக்கு சாதகமான காலம் இது. வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். இருக்கும் வேலையிலேயே முன்னேற்றம் இருக்கும். கவலை வேண்டாம்.

கலைத் துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். வரவேண்டிய சம்பள பாக்கியை போராடித்தான் பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு, எதிலும் நிதானத்தை தருவதுடன், இலக்கை எட்டிப் பிடிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம் : மாங்காடு அம்மன் கோயிலில் இருந்து 1.5 கிமீ தொலைவில் கோவிந்தராஜபுரத்தில் உள்ள சர்ப்ப சித்தரை வியாழக்கிழமையில் பூ மாலை அணிவித்து வணங்குங்கள். தடைகள் விலகி சாதிப்பீர்கள்.

மீனம் ராசியினருக்கான 2026 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்
கும்பம் ராசியினருக்கான 2026 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in