

குறி விலகாத அம்பை போல் குறிக்கோள் தவறாத நீங்கள், கள்ளம் கபடமில்லாத வெள்ளை உள்ளம் கொண்டவர்கள்.
உங்கள் ராசிக்கு 6-வது ராசியில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் தடைகள் உடைபடும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்திருந்த வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும். படிப்பு, வேலை சம்பந்தமாக பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். யோகா, தியானம் இவற்றில் மனம் ஈடுபடும். வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்.
1.1.2026 முதல் 31.5.2026 வரை குருபகவான் ராசிக்கு 7-ம் வீட்டில் நிற்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். 1.6.2026 முதல் 14.10.2026 வரை குருபகவான் ராசிக்கு 8-ம் வீடான அஷ்டமத்தில் அமரப் போகிறார். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். 14.10.2026 முதல் 31.12.2026 வரை குருபகவான் ராசிக்கு 9-ம் வீட்டுக்கு செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டில் நல்லது நடக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்.
19.4.2026 முதல் 14.5.2026 வரை 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைவதால், வாகனப் பழுதுகள் வந்து விலகும். பழைய வண்டிகளை வாங்க வேண்டாம். 18.9.2026 முதல் 12.11.2026 வரை 8-ம் வீட்டில் செவ்வாய் மறைவதால், பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். கர்ப்பிணிகள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பண விஷயத்தில் கறாராக இருங்கள்.
இந்த வருடம் முழுவதும் அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் கால்வலி, மூட்டுவலி மற்றும் முதுகுவலி வந்து விலகும். வாகனங்களில் அதிக வேகம் வேண்டாம். தாயாருடன் மனக்கசப்புகள் வரும். அவர் ஏதாவது கோபத்தில் பேசியிருந்தால் அதை பெரிதுபடுத்த வேண்டாம். அவருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.
டிச.4-ம் தேதி வரை ராகு 3-ம் வீட்டில் நிற்பதால் பணவரவுக்கு குறைவிருக்காது. பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கேது 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் இருக்கும். வீண் வம்பு சண்டைகள் வந்து போகும். டிச.5-ம் தேதி ராகு 2-ம் வீட்டுக்கு வருவதால் பேச்சில் கவனமாக இருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.
நீண்டநாள் பேசாத நண்பர்கள், உறவினர் எல்லாம் உங்களைத் தேடி வருவார்கள். அரசு அதிகாரிகளால் ஆதாயமுண்டு. கேது 8-ம் வீட்டுக்கு வருவதால் வாகனத்தில் சாகசமெல்லாம் வேண்டாம். கவனமாக ஓட்டுங்கள். கண் எரிச்சல், வயிற்றுவலி வந்துபோகும்.
இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தினர் முக்கியத்துவம் அளிப்பார்கள். விலையுர்ந்த ஆடை அணிகலன்களும் சேரும். பணப்புழக்கம் ஓரளவு இருக்கும். அடமானத்தில் வைத்துள்ள பழைய நகைகளை மீட்பீர்கள். கன்னிப் பெண்களுக்கு நீண்டநாள் கனவுகள் நனவாகும். உங்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலை அமையும். எப்போதும் பெற்றோர் பேச்சைக் கேட்கவும். அவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொண்டால், எதிலும் சாதிக்கலாம். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் பிறக்கும். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டுகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை விளம்பர யுக்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். புதிய முதலீடுகளை தவிர்த்துவிட்டு இருப்பதை வைத்து முன்னேறப் பாருங்கள். புது வாடிக்கையாளர்களின் வருகை உண்டு. ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். வேலையாட்களை அன்பாக நடத்துங்கள். அதேசமயம் அவர்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே கருத்து மோதல்கள் வரும். கூடுமானவரை இணக்கமான போக்கை கடைபிடிப்பது நல்லது. லாபம் குறையாது.
உத்தியோகத்தில் நெடுநாட்களாக காத்திருந்த பதவி உயர்வு இனி உண்டு. சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் இனி கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். கணினி துறையினர் அதிக சம்பளம், சலுகைகள் உள்ள வேலைக்கு மாறுவார்கள்.
கலைத்துறையினரின் படைப்புகள் பாராட்டப்படும். அதேசமயம் வீண் விமர்சனத்தை தவிர்க்கப் பாருங்கள்.
மொத்தத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு, லட்சியப் பாதையை நோக்கி பயணிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: மேல்மருவத்தூரில் இருந்து 12 கி.மீ தொலைவில் பெரும்பேர் கண்டிகையில் உள்ள எல்லையம்மனை தரிசியுங்கள். வெள்ளிக்கிழமையில் மஞ்சள், குங்குமம், புடவை சாற்றி வணங்குங்கள். தொட்டது எல்லாம் துலங்கும்.