

எங்கும், எப்போதும் முதலிடத்தைப் பிடிக்க நினைக்கும் நீங்கள், தானுண்டு தன் வேலையுண்டு என்றி ருப்பீர்கள். உங்களை சீண்டினால் எரிமலையாய் பொங்கி எழுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 7-வது ராசியில் சந்திரன் நிற்கும்போது இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் உடனே முடியும். மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நீயா நானா என்ற போட்டி மாறும். விட்டுக் கொடுத்து போவீர்கள்.
பிள்ளைகளின் பிடிவாதம் நீங்கும். அவர்களுக்கு நல்ல அறிவுரைகளையும், பாரம்பரியத்தையும் சொல்லி கொடுப்பீர்கள். மகளுக்கு பல இடங்களில் வரன் தேடி அலைந்த நிலை மாறும். இப்போது, உங்கள் அருகிலேயே, சொந்தத்திலேயே நல்ல வரன் அமையும். சொந்த பந்தங்கள் மெச்சும்படி திருமணத்தை நடத்தி வைப்பீர்கள். சகோதரர், சகோதரியின் நிலை அறிந்து உதவுவீர்கள்.
1.1.2026 முதல் 31.5.2026 வரை குருபகவான் ராசிக்கு 8-ம் வீட்டில் நிற்பதால் வாகனத்தில் எச்சரிக்கை அவசியம். பணத்தை கவனமாக கையாளுங்கள். 1.6.2026 முதல் 14.10.2026 வரை குருபகவான் ராசிக்கு 9-ம் வீட்டுக்கு செல்வதால் பணப் பற்றாக்குறை நீங்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். ஊர் பிரச்சினைகளில் தலையிட்டு முடிப்பீர்கள். 14.10.2026 முதல் 31.12.2026 வரை குருபகவான் ராசிக்கு 10-ம் வீட்டுக்கு செல்வதால் அலைந்து திரிந்து சில வேலைகளை முடிப்பீர்கள். முன்கோபத்தையும், விமர்சனத்தையும் தவிர்த்து விடுங்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்கள் மீது வீண்பழி சுமத்துவார்கள்.
25.3.2026 முதல் 19.4.2026 வரை 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைவதால், செலவுகளை கட்டுப்படுத்துங்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற போராட வேண்டிவரும். பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். பார்வைக் கோளாறு வரக்கூடும். 2.8.2026 முதல் 18.9.2026 வரை 8-ம் வீட்டில் செவ்வாய் மறைவதால், இரவு நேரத்து பயணங்களை தவிர்ப்பது நல்லது. தந்தையாருக்கு அவ்வப்போது மருத்துவச் செலவுகள் வந்து போகும். வீண் வறட்டு கவுரவத்துக்காக செலவு செய்வதை தவிர்த்து விடுங்கள்.
இந்த வருடம் முழுவதும் சனி பகவான் 5-ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். அவர்கள் விரும்பும் பாடப்பிரிவில் படிக்க அனுமதியுங்கள். அப்போதுதான் அவர்கள் மனது ஒன்றி படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பூர்வீகச் சொத்தால் செலவுகள் வரும்.
டிச.4-ம் தேதி வரை ராகு 4-ம் வீட்டில் நிற்பதால் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கும். கேது 10-ல் நிற்பதால் பணிச்சுமை அதிகரிக்கும். யாரையும் விமர்சிக்க வேண்டாம். டிச. 5-ம் தேதி முதல் ராகு 3-ம் வீட்டுக்கு வருவதால் தடைகள் விலகும். பெரிய பதவிகள் பொறுப்புகள் தேடி வரும். புது வேலை கிடைக்கும். கேது 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தையாருக்கு உடல்நிலை பாதிக்கும். மருத்துவ சிகிச்சை தேவைப்படும். சிலர் வெளிமாநில புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவரின் கோபம் தணியும். உங்களின் நிர்வாகத் திறமையை கண்டு மெச்சுவார். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். கன்னிப்பெண்களுக்கு தடைபட்ட கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். முகப்பரு, அலர்ஜி மறையும். மாணவ -மாணவிகளுக்கு மறதி, மந்தம் விலகும். உயர்கல்வியில் வெற்றியுண்டு. பெற்றோரின் அறிவுரையை அலட்சியம் செய்யாதீர்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் வெற்றியும் உண்டு. வங்கியில் பலமுறை கடனுதவி கேட்டும் ஏதோ சில காரணங்களால் தடைபட்டு வந்த நிலை மாறி, இனி உங்களை கூப்பிட்டு கடனுதவி கொடுப்பார்கள். போட்டிகளையும் தாண்டி ஓரளவு சம்பாதிப்பீர்கள். மருந்து, கமிஷன், மரவகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும். அவர்களை அனுசரித்துப் போவது பலவிதங்களில் நன்மை தரும்.
உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரி உங்களுக்கு ஆதரவாகத்தான் இருப்பார். எனினும் பணிச்சுமைக்கு குறைவிருக்காது. சக ஊழியர்களுடன் சலசலப்பு உண்டு. கணினி துறையினருக்கு, பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைபட்டாலும் போராடி பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு நழுவிப்போன வாய்ப்புகள் மீண்டும் தேடி வரும். வீண் வதந்திகளிலிருந்து தள்ளியிருக்கப் பாருங்கள். பழைய சம்பள பாக்கிகள் கைக்கு வரும். அடுத்தவரை பற்றி விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது.
மொத்தத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு, மன உறுதியுடன் புதிய அணுகுமுறையால் எதிலும் வெற்றி பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: செங்கல்பட்டிலிருந்து 8 கி.மீ தொலைவில் திருவடிசூலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபைரவரை சனிக்கிழமை மற்றும் அஷ்டமி திதி நாட்களில் நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்குங்கள். எதிலும் வெற்றி கிட்டும்.