Published : 13 Apr 2024 08:44 PM
Last Updated : 13 Apr 2024 08:44 PM

செய்தித் தெறிப்புகள் @ ஏப்.13: அண்ணாமலை புது கணிப்பு முதல் ஸ்டாலின் ‘வார்னிங்’ வரை

“தேர்தலுக்குப் பிறகு இபிஎஸ் தலைமையில் அதிமுக இருக்காது” - அண்ணாமலை: “மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் தினகரன் பின்னால் அணிவகுத்து நிற்பார்கள். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு இது நடக்கத்தான் போகிறது. இதை ஓபனாகவே சொல்வேன். இதைச் சொல்ல தயக்கமோ, பயமோ எனக்கு கிடையாது” என்று தேனியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ராகுலுக்கு இனிப்பான வெற்றி உறுதி: ஸ்டாலின் நெகிழ்ச்சி: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் ஜூன் 4-ஆம் தேதி இந்தியா ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியைத் தரும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கூடவே, ராகுல் காந்தி தனக்காக இனிப்பு வாங்கிய வீடியோவை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் இருந்து பகிர்ந்திருந்தார்.

கன்னியாகுமரியில் ரோடு ஷோ நடத்திய அமித் ஷா: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ மேற்கொண்டார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமித் ஷா ரோடு ஷோ சென்றபோது பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

“திமுக அல்ல... ‘டிரக்ஸ்’ முன்னேற்ற கழகம்!”- நிர்மலா சீதாராமன்: “போதையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தமிழகத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது. வசூல் அரசியல் தமிழகத்தில் வேரூன்றி இருப்பது கவலை அளிக்கிறது. திராவிட முன்னேற்ற கழகம் இல்லை... டிரக்ஸ் முன்னேற்ற கழகத்தை விரட்டுவோம்” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சிக்கிய குற்ற ஆவணங்கள்: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் கடந்த 9-ம் தேதி நடந்த சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னை, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளியின் பல்வேறு இடங்களில் ஜாபர் சாதிக் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. சோதனை நடவடிக்கையின்போது, பல்வேறு குற்ற ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று தெரிவித்துள்ளது.

நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் ஷிண்டே நீக்கம்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் கடிதத்தைத் தொடர்ந்து பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோரின் பெயர்களை பாஜக நீக்கியுள்ளது. கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“எவ்வளவு காலம்தான் காங்கிரஸை குற்றம்சாட்டுவீர்கள்?”: “எவ்வளவு காலம்தான் காங்கிரஸை குற்றம்சாட்டுவீர்கள்? கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. பாஜக தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தது? ‘75 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை’ என்கிறார்கள். எதுவும் நடக்கவில்லை என்றால், உத்தராகண்ட் எப்படி இவ்வளவு திறமையுடன் வளர்ந்திருக்கிறது? ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் எங்கிருந்து வந்தது? இதற்கு யார் காரணம்? 1950-களில் பண்டிட் ஜவஹர்லால் நேரு முன்முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால் சந்திரயான் வெற்றிக்கான விதைகள் சாத்தியமா?” என்று உத்தராகண்ட் பிரச்சாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி கேள்விகளை அடுக்கினார்.

“மோடி வெல்வது பாஜகவுக்கே நல்லதல்ல!” - முதல்வர் ஸ்டாலின் கருத்து: “என்னைப் பொறுத்தவரையில் மோடி வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கே நல்லதல்ல” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், “மக்களவைத் தேர்தல் களத்தில் திமுக முதன்மையான இடத்தில் இருக்கிறது. அதிமுக வெகுதூரம் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடிக்கப் போராடுகிறது. மற்ற கட்சிகள் கனவு உலகத்தில் மிதந்து கொண்டிருக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு ஏப்.15-ல் விசாரணை: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏப்ரல் 15-ம் தேதி விசாரிக்க உள்ளது.

சிட்னி கத்திக் குத்து தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு: சிட்னியின் போண்டி கடற்கரைக்கு அருகில் ஷாப்பிங் மால் ஒன்றில் ஆஸ்திரேலிய ரக்பி லீக் ஜெர்சி அணிந்த ஒரு நபர் பெரிய கத்தியுடன் கண்ணால் பார்ப்பவர்கள் மீது குத்தி தாக்குதல் நடத்தினார். ஒன்பது மாதக் குழந்தை, அதன் தாய் என பலரை அந்த நபர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவசர அழைப்பின்படி ஹெலிகாப்டர் மூலம் ஷாப்பிங் மால் விரைந்த நியூ சவுத் வேல்ஸ் போலீஸார், மாலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவரை சுட்டு வீழ்த்தினர். எனினும், அவர் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். காவல் துறை இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம், தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.

காங். வேட்பாளர் சுதாவை முற்றுகையிட்ட விவசாயிகள்: பாபநாசம் வட்டம், ஆதனூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை, திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலையை எதிர்த்து 501 நாட்களாக போராடி வரும் கரும்பு விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி: “அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அதிமுக காணாமல் போய்விடும் என சிலர் சொல்கிறார்கள். யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ம் தேதிக்குப் பின் தெரியும்” என எடப்பாடி பழனிசாமி ஆவேசத்துடன் பேசியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி தரும் வகையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

“மோடியிடம் 25 ஆண்டுகளுக்கான திட்டமும் இருக்கிறது” - அமித் ஷா: "கடந்த 10 ஆண்டுகளில், சாத்தியமற்றதாகத் தோன்றிய பல பணிகளை மோடி செய்து முடித்துள்ளார். மோடியிடம் 10 ஆண்டு கால சாதனையும், அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டமும் இருக்கிறது. எனவே, இந்தத் தேர்தலில் மோடியை மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக ஆக்க வேண்டும்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

“அரசியல் சாசனத்தையும் இப்போது காத்திடாவிடில்...” - கார்கே எச்சரிக்கை: “நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் இப்போது காத்திடாவிடில் சுதந்திரத்துக்கு முன் இருந்த நிலைக்கு நாடு சென்றுவிடும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எச்சரித்துள்ளார்.

காங்கிரஸின் கொள்கை மீது ஜெ.பி.நட்டா விமர்சனம்: ‘வாக்குகளைப் பெறு; வாக்களித்தவர்களை மற’ என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கை என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x