Published : 13 Apr 2024 08:00 PM
Last Updated : 13 Apr 2024 08:00 PM

“யார் காணாமல் போவார்கள்..?” - அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

அரியலூர்: “அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அதிமுக காணாமல் போய்விடும் என சிலர் சொல்கிறார்கள். யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ம் தேதிக்குப் பின் தெரியும்” என எடப்பாடி பழனிசாமி ஆவேசத்துடன் பேசியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி தரும் வகையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரியலூரில் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக காணாமல் போய்விடும் என்று சிலர் சொல்கிறார்கள். யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு தெரியும். அதிமுக தெய்வ சக்தி உள்ள கட்சி. அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அதிமுகவை சீண்டிப் பார்க்காதீர்கள். அப்படிப் பார்த்தால் என்ன ஆகும் என்பதை தொண்டர்கள் காட்டுவார்கள். இந்தியாவிலேயே அதிக தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுகதான்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகிவிட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கெல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சியை மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த வேலையெல்லாம் இங்கே எடுபடாது.

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கொடுத்தோம் என்கிறார் ஸ்டாலின். 27 மாதம் அதிமுக போராடியதால் தான் வேறு வழியில்லாமல் கொடுத்தார்கள். நமது சட்டமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்தார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லி அழுத்தம் கொடுத்ததால்தான் உரிமைத் தொகை கொடுத்துள்ளீர்கள். அதிமுக இல்லாவிட்டால் மக்களுக்கு உரிமைத் தொகை கிடைத்திருக்காது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கவர்ச்சியாக பேசும் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பின்பு தகுதியானவர்களுக்குத்தான் உரிமைத் தொகை என மாற்றிப் பேசுவார். அனைத்து நகர பேருந்துகளிலும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்றார் ஸ்டாலின். இப்போது பேருந்துக்கு பெயின்ட் அடித்து அந்தப் பேருந்தில் ஏறினால்தான் இலவசமாக பயணம் செய்ய முடியும். மற்ற பேருந்துகளில் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைபாடு, வந்த பின்பு வேறொரு நிலைபாடு.

எப்போது பார்த்தாலும் மக்கள் என் பக்கம் என்கிறார் ஸ்டாலின். மக்கள் உங்கள் பக்கம்தான், ஆனால், வாக்கு எங்களுக்கு தான் போடுவார்கள். மக்களை நீங்கள் எப்போது நேரடியாக சென்று பார்த்தீர்கள். இப்போதுதான் கடைக்குச் சென்று டீ குடிக்கிறார். முன்பு சைக்கிளில் செல்வார், பளு தூக்குவார், வாக்கிங் போவார். இதுதான் திமுகவின் 3 ஆண்டுகளாக சாதனை. இதைத் தவிர்த்து வேறு எதையும் செய்யவில்லை. வாக்கிங் போகும்போது கூட தனது மகனின் திரைப்படம் என்ன வசூலானது என்பது குறித்துதான் பேசுவார்.

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்காத இடமே இல்லை. இன்றைக்கு தமிழகம் போதைப்பொருள் நிறைந்த இடமாக காட்சி அளிக்கிறது. அண்மையில் திமுக நிர்வாகி சிக்கினார். எதிர்கட்சி அந்தஸ்தில் இருந்தது காங்கிரஸ். ஸ்டாலின் என்றைக்கு ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தாரோ அன்றைக்கே காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது.

பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும்போது விசுவாசமாக இருந்தோம். இன்று பாஜக மக்களுக்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றினால் அதனை எதிர்க்கும் திராணி அதிமுகவுக்கு உள்ளது. எதிர்க்கும் நேரத்தில் எதிர்ப்போம். மக்களுக்கு நல்லது செய்தால் பாராட்டுவோம். இது அதிமுகவின் ஸ்டைல். அரியலூருக்கு அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. திமுக ஆட்சியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த திட்டத்தையும் காணவில்லை” என்றார் எடப்பாடி பழனிசாமி.

அண்ணாமலை பேசியது என்ன? - “இந்தத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் தினகரன் பின்னால் அணிவகுத்து நிற்பார்கள். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு இது நடக்கத்தான் போகிறது. இதை ஓபனாகவே சொல்வேன். இதைச் சொல்ல தயக்கமோ, பயமோ எனக்கு கிடையாது” என்று தேனியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். முழுமையாக வாசிக்க > “தேர்தலுக்குப் பிறகு பழனிசாமி தலைமையில் அதிமுக இருக்காது” - அண்ணாமலை கணிப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x