

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் கடந்த 9-ம் தேதி நடந்த சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் கடந்த 9-ம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, சென்னை சாஸ்திரி நகரில் உள்ள பிரபல ஓட்டல் உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகம், பெரம்பூரில் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய 3 பேரின் வீடு, புரசைவாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டல் என்று சோதனை நடத்தப்பட்டது.
இதுதவிர, மதுரை, திருச்சி என ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அன்றைய தினம் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை தனது எக்ஸ் பக்கத்தில், "9/4/2024 அன்று சென்னை, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளியின் பல்வேறு இடங்களில் ஜாபர் சாதிக் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. சோதனை நடவடிக்கையின்போது, பல்வேறு குற்ற ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன" என்று தெரிவித்துள்ளது.
சோதனையின் பின்னணி: உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) போலீஸார் டெல்லியில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கைது செய்தனர்.
இதற்கு மூளையாக செயல்பட்டது சினிமா தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9-ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரை டெல்லி என்சிபி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். சென்னைக்கு அழைத்து வந்தும் விசாரணை நடத்தினர். பின்னர், மீண்டும் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது வாக்குமூலம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், அவரது நண்பரும், தமிழ் திரைப்பட இயக்குநருமான அமீருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. அதன்படி, டெல்லியில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அமீர் கடந்த 2-ம் தேதி ஆஜரானார். அவரிடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நீடித்தது. அவர் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து அமீருக்கு என்சிபி போலீஸார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். ஜாபர் சாதிக் உடன் தொழில் ரீதியில் கூட்டாளியாக இணைந்தது எப்படி என்ற விவரத்தையும் அமீரிடம் என்சிபி போலீஸார் கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.