Last Updated : 13 Apr, 2024 03:51 PM

5  

Published : 13 Apr 2024 03:51 PM
Last Updated : 13 Apr 2024 03:51 PM

“தேர்தலுக்குப் பிறகு பழனிசாமி தலைமையில் அதிமுக இருக்காது” - அண்ணாமலை பிரச்சாரம் @ தேனி

தேனியில் டி.டி.வி. தினகரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் கே.அண்ணாமலை. | படம்: நா. தங்கரத்தினம்.

தேனி: "இந்தத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் தினகரன் பின்னால் அணிவகுத்து நிற்பார்கள். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு இது நடக்கத்தான் போகிறது. இதை ஓபனாகவே சொல்வேன். இதைச் சொல்ல தயக்கமோ, பயமோ எனக்கு கிடையாது" என்று தேனியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

தேனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் செய்தார். தேனி பங்களாமேட்டில் அவர் பேசியது: "10 ஆண்டுகளாக பாஜக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. அதனால் பாஜகவுக்கு விளம்பரம் தேவையில்லை. ஆனால் ஸ்டாலின் தனது 33 மாத ஆட்சியில் எதுவும் செய்யாமல் விளம்பரம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்.

ஏழைகள், விவசாயிகளை மையமாக வைத்து ஓர் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்று பாஜக நிரூபித்து காட்டி இருக்கிறது. இந்தியாவை காப்பாற்ற வாருங்கள் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், உண்மையில் தமிழகத்தை ஸ்டாலினிடம் இருந்துதான் காப்பாற்ற வேண்டும். அந்த அளவுக்கு மாநிலத்தில் மதுப்பழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சாவின் தலைநகரமாக தமிழகம் மாறிவிட்டது. குடும்ப ஆட்சியின் கூடாரமாக உள்ளது. அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு லஞ்சம் வாங்குகிறார்கள். முதலில் இவர்களிடம் இருந்துதான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். அதற்காகத்தான் நாம் இந்த மாபெரும் கூட்டணியை அமைத்துள்ளோம்.

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் வெவ்வேறு போன்று தெரிந்தாலும் தலைமை செயல்பாடுகள் ஒன்றாகவே இருக்கிறது. அதிமுகவை வழிநடத்தப்போவது தினகரன்தான் என்று அதிமுக தொண்டர்களுக்கும் தெரியும். இதனால் அவர்களும் டி.டி.வி. தினகரனுக்கே வாக்களிப்பார்கள். டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்று விட்டால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும். இதனை புரிந்து கொண்ட ஸ்டாலினும், பழனிசாமியும் தினகரனை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

மத்தியில் காங்கிரஸுடன் கூட்டணி அமைந்திருந்ததுடன் கேரளாவிலும் காங்கிரஸே ஆட்சி நடத்தியது. இருப்பினும் முல்லைப் பெரியாறு நீர்மட்ட உயர்வில் திமுக எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. 2ஜி அலைக்கற்றை ஊழலை சுட்டிக்காட்டி திமுகவை, காங்கிரஸ் அமைதியாக உட்கார வைத்துவிட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு மாடு வைத்து இருப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படும் என்றார்கள், ஆனால் இதுவரை தரவில்லை.

தேர்தல் நேரத்தில் திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுக்க வருவார்கள். அது கஞ்சா விற்ற பணம். அதை வாங்காதீர்கள். பாஜக பொறுப்பேற்ற இந்த 10 ஆண்டுகளில் மாநில வரிபகிர்வை 10 சதவீதமாக உயர்த்தி தற்போது 42 சதவீதம் வழங்கி வருகிறது. ஆனால் திமுகவும், காங்கிரஸும் இதை மறைத்து மோடியை குற்றம் சாட்டுகிறார்கள். தமிழக அரசிடம் கொடுத்தால் ஊழல் செய்துவிடுவார்கள் என்றுதான் மத்திய அரசு பயனாளிகளின் வங்கி கணக்கிலே பணத்தை வரவு வைக்கிறது.

மத்தியில் யாராவது ஆட்சி அமைத்தால் அதிமுகவால் கோரிக்கையை வலியுறுத்தத்தான் முடியும். அதற்காகத்தான் இந்த தேர்தலில் போட்டி இடுகிறார்கள். திமுகவைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவதைத் தடுப்பதற்காகத்தான் களம் இறங்கி இருக்கிறார்கள். ஒருவேளை பாஜக 398 இடங்களில் பெற்றுவிட்டால், நாங்கள் ஜெயித்துவிட்டோம் பார்த்தீர்களா என்று பெருமைப்பட்டு கொள்வார்கள்.

16 வருடங்கள் கழித்து டி.டி.வி. தினகரன் வந்துள்ளார் என விமர்சித்துள்ளார் இபிஎஸ். சில நேரங்களில் ராமன் காட்டை விட்டு போய்த்தான் ஆக வேண்டும். ஆனால், சில நேரங்களில் அதே ராமன் திரும்பி வந்துதான் ஆக வேண்டும். ராமபிரான் போல வனவாசம் முடிந்து தற்போது டி.டி.வி. தினகரன் அரசியல் மாற்றம் ஏற்படுத்த வந்துள்ளார். ஒப்பந்ததாரர்களுக்காக நடத்தப்படும் கட்சிதான் அதிமுக. அவரது வேட்பாளர்கள் எல்லாம் பாருங்கள், காண்ட்ராக்டர்களுக்கு தான் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இந்த தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் தினகரன் பின்னால் அணிவகுத்து நிற்பார்கள். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு இது நடக்கத்தான் போகிறது. இதை ஓபனாகவே சொல்வேன். இதைச் சொல்ல தயக்கமோ, பயமோ எனக்கு கிடையாது. கட்சியை அடமானம் நடத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லை.

2021 தேர்தலில் தினகரன் கூட்டணியில் இருந்திருந்தால் இன்றைக்கு ஸ்டாலின் முதல்வராகி இருக்க முடியாது. மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக டி.டி.வி. தினகரன் வெளியே நிற்கவைக்கப்பட்டார்.

திமுக என்ற அசுரனை எதிர்த்து டி.டி.வி. தினகரன் களத்தில் போட்டியிடுகிறார். தமிழகத்தில் ஊழல் பிரஷர், குடும்ப ஆட்சி பிரஷர், தமிழக உரிமையை விட்டு கொடுத்த பிரஷர் என்று ஏகப்பட்ட அழுத்தத்தில் உள்ளது. இந்த பிரஷர்கள் அனைத்தையும் டி.டி.வி. தினகரனின் பிரஷர் குக்கர் வெளியேற்றும். தமிழக அரசியல் மாறிக் கொண்டு இருக்கிறது. 2026-ல் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளமாக இத்தேர்தல் அமையும்" என்று அண்ணாமலை பேசினார். பாஜக மாவட்டத் தலைவர் பி.சி. பாண்டியன், அமமுக மாவட்டச் செயலாளர்கள் காசிமாயன், முத்துச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x