ராகுலுக்கு இனிப்பான வெற்றி உறுதி: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி ட்வீட்

ராகுலுக்கு இனிப்பான வெற்றி உறுதி: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி ட்வீட்
Updated on
1 min read

சென்னை: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் ஜூன் 4 ஆம் தேதி இந்தியா ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியைத் தரும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கூடவே ராகுல் காந்தி தனக்காக இனிப்பு வாங்கிய வீடியோவை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் இருந்து பகிர்ந்திருந்தார்.

கோவை செட்டிபாளையத்தில் இண்டியா கூட்டணி சார்பில் நேற்று (ஏப்.12) மாலை நடந்த பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி (கரூர்) ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசினர்.

முன்னதாக, அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த ராகுல் காந்தி வழியில் கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் ஓர் இனிப்பகத்தில் மைசூர் பாக் வாங்கினார். கடை அவர் சென்ற சாலையின் எதிர்புறத்தில் இருந்ததால் ராகுல் காந்தி சாலைத் தடுப்பைத் தாண்டிச் சென்று கடையில் இனிப்புகளை காசு கொடுத்து வாங்கிக் கொண்டு அதற்கான சில்லறையையும் பெற்றுக் கொண்டார். ஊழியர் ஒருவர் வழங்கிய இனிப்பை ருசித்ததோடு கடையில் இருந்த பெண் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் பிரச்சாரத் திடலுக்கு ராகுல் வந்தபோது அவரை முதல்வர் ஸ்டாலின் அரவணைத்து வரவேற்றார். அப்போது அவரிடம் ராகுல் காந்தி இனிப்புகளைக் கொடுத்தார்.

இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் அதனை டேக் செய்து முதல்வர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை பகிர்ந்த ட்வீட்டில், “அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்! எனது சகோதரரின் இனிய செயலால் நான் பரவசமடைந்தேன். ஜூன் 4 ஆம் தேதி இந்தியா அவருக்கு இனிப்பான வெற்றியைத் தரும்” என்று பதிவிட்டுள்ளார். அது இந்திய மக்கள் மற்றும் இண்டியா கூட்டணி எனப் பொருள்படும் வகையில் அமைந்துள்ளது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்! Touched and overwhelmed by the 'sweet gesture' from my brother @RahulGandhi . On June 4th, #INDIA will surely deliver him a sweet victory!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in