கன்னியாகுமரி | பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமித் ஷா ரோடு ஷோ

அமித் ஷா ரோடு ஷோ
அமித் ஷா ரோடு ஷோ
Updated on
1 min read

குமரி: மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ மேற்கொண்டார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமித்ஷா ரோடு ஷோ சென்றபோது பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழக அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்கு மத்தியில் தேசிய தலைவர்களும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர்கள் மோடி, அமித் ஷா ஆகியோர் தமிழகத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ மேற்கொண்டார். கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தக்கலை பழைய பேருந்து நிலைய சந்திப்பு முதல் மேட்டுக்கடை வரை ரோடு ஷோ மேற்கொண்டார்.

அமைச்சர் அமித் ஷா இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில், பிரதமர் மோடி அவர்களின் மீது மக்கள் கொண்டுள்ள பேரன்பின் எழுச்சியை நேரலையில் பாருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

கன்னியாகுமரியில் காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த விஜய் வசந்த், நசரத் பாசிலியன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in