Published : 18 Jan 2024 04:06 AM
Last Updated : 18 Jan 2024 04:06 AM

ஆவாரங்காடு, வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு - 109 பேர் காயம்

வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய திருச்சி மாவட்டம் சூரியூரைச் சேர்ந்த சிவாவுக்கு மோட்டார் சைக்கிளை பரிசாக வழங்கிய மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

திருச்சி: பொங்கல் பண்டியை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள ஆவாரங்காடு பொன்னர்-சங்கர் திடலில் ஜல்லிக்கட்டு நேற்று காலை தொடங்கியது. ஆவாரங்காடு, கலிங்கபட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய 4 கிராம மக்களின் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு என்பதால், 4 கிராமங்களின் கோயில்காளைகளும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் முதலில் வாடிவாசல் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தட்சிணா மூர்த்தி கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

ஒரே நேரத்தில் 4 கிராம கோயில் காளைகளும் மொத்தமாக அவிழ்த்து விடப்பட்டன. பின்னர், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 626 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை அடக்க ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் மொத்தம் 219 வீரர்கள் களமிறங்கினர். இதில், மாடுகள் முட்டியதில் 57 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் மேல் சிகிச்சைக்காக 7 பேர் மணப் பாறை மற்றும் திருச்சி அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வாடி வாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சிலமின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றன. சிலகாளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை பந்தாடின. இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், வெள்ளிநாணயம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

போட்டியில் 19 காளைகள் அடக்கிய திருச்சி காட்டூர் தயா என்பவர் சிறந்த மாடுபிடி வீர ராக தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு எல்இடி டிவி பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல, சிவகங்கை மாவட்டம் கீழவயல் சிவானந்தம் என்பவரது காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு, குளிர் சாதனப்பெட்டி பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டை ஆயிரக் கணக்கான மக்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதி பெருமாள் கோயில் திடலில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் தொடங்கிய ஜல்லிக்கட்டை மாநில சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் தொடங்கி வைத்தார். மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டார். முதலில் கோயில் காளைகளும், அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 594 காளைகளும் பல்வேறு சுற்றுகளாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு 234 மாடுபிடி வீரர்கள் களமி றங்கினர். இதில், காளைகள் முட்டியதில் 52 பேர் காயம் அடைந்தனர்.

அதில் படுகாயம் அடைந்த மாடுபிடி வீரர்கள் 5 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 25 காளைகளை அடக்கிய திருச்சி மாவட்டம் சூரியூரைச் சேர்ந்த சிவாவுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளை ஆலங்குடி போலீஸார் மேற்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x