Last Updated : 18 Jan, 2024 05:44 AM

 

Published : 18 Jan 2024 05:44 AM
Last Updated : 18 Jan 2024 05:44 AM

சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிராவயல் பொட்டலில் கட்டுமாடாக அவிழ்த்துவிடப்பட்ட காளை, பார்வை யாளர்கள் மீது பாய்ந்தது.படம்: எல்.பாலச்சந்தர்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 1,200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 108 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் நேற்று காலை மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இதையொட்டி பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் மாடுபிடி வீரர்கள் மஞ்சுவிரட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டுறவுத் துறைஅமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மஞ்சுவிரட்டை கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதலில்கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை யாரும் பிடிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து மஞ்சுவிரட்டுக்குப் பதிவு செய்யப்பட்ட 272 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுகளைப் பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், மிக்சி, கிரைண்டர், அண்டா, குத்துவிளக்கு, மின்சார அடுப்பு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

2 பேர் உயிரிழப்பு: இதற்கிடையே சிராவயல் பொட்டல், கம்பனூர் பரணி கண்மாய், கும்மங்குடி பொட்டல் ஆகிய இடங்களில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி,மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன.

மாடுகள் முட்டியதில் திருப்பத்தூர் அருகே வலையப்பட்டியைச் சேர்ந்த சிறுவனான பாஸ்கரன் என்ற ராகுல் உயிரிழந்தார். இவர், அப்பகுதியில்உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்புபடித்து வந்தார். அதேபோல் மாடு முட்டியதில் மருதங்குடியைச் சேர்ந்த மணிமுத்து என்பவரும் உயிரிழந்தார்.

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என108 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மஞ்சுவிரட்டு பொட்டலில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த 12 பேர் தீவிர சிகிச்சைக்காக திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மஞ்சுவிரட்டை கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ.,ராமநாதபுரம் சரக டிஐஜி துரை,சிவகங்கை எஸ்பி அரவிந்த் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முதல்வர் இரங்கல்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில் மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடைபெற்ற சம்பவத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சி, மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துமணி மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், கே.வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் பாஸ்கரன் (வயது 12) ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x