Published : 28 Dec 2023 06:11 AM
Last Updated : 28 Dec 2023 06:11 AM

வனப் பகுதியில் ஆமையை கொன்று சமைத்தவர்கள் போலீஸார் அல்ல: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

சென்னை: வனப் பகுதியில் ஆமையை கொன்று சமைத்தவர்கள் தமிழக காவல் துறையினர் அல்ல. அந்த சம்பவம் தமிழகத்திலேயே நடக்கவில்லை என்று டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். வனப்பகுதியில் சிலர் ஆமையை கொன்று சமைப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த செயலில் ஈடுபட்டது தமிழக காவல் துறையினராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது.

இதுகுறித்து தமிழக வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, போலீஸாரும் விசாரணையில் இறங்கினர். இந்நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப் பட்டுள்ளதாவது: ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள மங்களப்பட்டி வனப்பகுதி யில் ஆமையை சிலர் கொன்று சமைப்பதாக வீடியோ, புகைப்பட காட்சிகள் சமீபத்தில் வெளியாகின. அதில் வரும் நபர்கள் தமிழக காவல் துறையின் சிறப்பு அதிரடி படையை சார்ந்தவர்கள் என சந்தேகம் உள்ளதாக முகநூல், எக்ஸ், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த 17-ம் தேதி செய்திகள் பரவின. சில நாளிதழ்களிலும் இதுபற்றி செய்தி வெளிவந்தது.

இதுகுறித்து விசாரணை செய்ததில், அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிறப்பு அதிரடி படையைச் சார்ந்தவர்களோ, தமிழ்நாடு காவல் துறையைச் சார்ந்தவர்களோ இல்லை என்பது தெரியவந்தது. தவிர, இந்த சம்பவம் தமிழகத்தில் நடக்கவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு மாநிலத்தில் இது நடந்துள்ளதாக தெரிகிறது. எனவே, அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிறப்பு அதிரடி படையை சார்ந்தவர்கள் என்ற தகவல் தவறானது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x