Published : 10 Dec 2024 01:42 PM
Last Updated : 10 Dec 2024 01:42 PM

‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்துடன் பிரச்சாரம் - கவனம் பெறும் ஆதவ் அர்ஜுனா வீடியோ

ஆதவ் அர்ஜுனா

சென்னை: “ஒரு நேர்மையான மக்களுக்கான அரசு அமைய ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறது ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ நிறுவனம். வருங்கால சமூகத்தை அரசியல் மயமாக்கி, தேர்தல் அரசியலை அனைவருக்குமான இடமாக வென்றெடுக்கும் ஓர் இயக்கமாக விரைவில் வீரநடைப் போடவுள்ளது ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ நிறுவனம்” என்று ஆதவ் அர்ஜுனா சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்! என்று வாசகத்துடன் வீடியோ பதிவொன்றை ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ளார்.

அதில் , “அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால், அரசியல் உங்கள் வாழ்க்கையில் தலையிடும் என்றார் புரட்சியாளர் லெனின். அடுத்த தலைமுறையிடம் அரசியலை சரியான முறையில் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட நிறுவனமே வாய்ஸ் ஆஃப் காமன்ஸ். இதை நிறுவியவர், தமிழகத்தின் தேர்தல் அரசியல் ஆய்வாளரான ஆதவ் அர்ஜுனா.

எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், 5 வயதிலேயே பெற்றோரை இழந்தார். கூடைப்பந்தாட்ட விளையாட்டில் இவருக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக சென்னையில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் உதவித்தொகையுடன் தங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்தபடி, சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் அரசியல் அறிவியல் படித்தார். அப்போது பெரியார் சிந்தனைகளையும், அம்பேத்கர் கருத்துகளையும் ஆழ்ந்து படித்தார்.

இங்கு எல்லோரும் சமம் என்ற அரசியலே இனி அவசியம் என்ற சிந்தனையை வந்தடைந்தார். பெரியாரின் சமத்துவ கருத்துகள் தமிழகத்தில் வேரூன்றுவதற்கு, அண்ணாவின் தேர்தல் அரசியல் வெற்றியும், முக்கியமான காரணம். பெரியாரின் கொள்கைகளுக்கு அண்ணா தனது ஆட்சியால் செயல் வடிவம் கொடுத்தார்.

அதேநேரம் இந்தியாவின் அடையாளமாக அறியப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர் மாபெரும் சிந்தனைப் பொக்கிஷத்தை நமக்காக விட்டுச் சென்றார். ஆனால் அம்பேத்கரின் அரசியல் கருத்துகள் செயல் வடிவம் பெற முடியவில்லை. ஏனெனில் தேர்தல் அரசியலில் அவர் கொள்கைகளை செயல்படுத்தும் ஆட்சிகள் அமையவில்லை. ஓர் அரசியல் கொள்கையானது செயல் வடிவம் பெறுவதற்கு தேர்தல் அரசியலே பிரதானம் என்கிற யதார்த்தம், ஆதவ் அர்ஜுனாவுக்குப் புரிந்தது.

தேர்தல் அரசியல் குறித்து ஆய்வு செய்யும் பணியினை அங்கிருந்தே தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக 2015-ம் ஆண்டு, திமுக-வுக்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் குழுவில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று நடத்தினார். தொடர்ந்து திமுக-வின் தேர்தல் வெற்றியை எளிதாக்க, ஒன் மைண்ட் இந்தியா என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் தமிழகத்தின் 234 தொகுதிகளையும் பகுப்பாய்வு செய்து, தேர்தல் வியூகத்தை கட்டமைத்தது.

திமுக-வுக்கான தேர்தல் உத்திகளை நவீனப்படுத்தவும், புதிய உத்திகளை மேற்கொள்ளவும் ஐ-பாக் நிறுவனத்தின் தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தவர் ஆதவ் அர்ஜுனா. அவருடன் இணைந்து 2021-ம் ஆண்டு தேர்தல் களத்தில் முக்கியப் பங்காற்றியவர் ஆதவ். சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன்பின் அடித்தட்டு மக்களுக்கும் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுத்து ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஒன் மைண்ட் இந்தியா என்ற நிறுவனம் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் என்ற மக்கள் இயக்கமாக உருவெடுத்தது.

விசிக-வுடன் 2022ம் ஆண்டு, வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம் கைக்கோர்த்தது. கட்சி நிர்வாகத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள துவங்கி, டிஜிட்டல் முறையில் தரவுகளை கையாள தனி டேஷ் போர்டு கொண்டுவரப்பட்டது. பெரிய கட்சிகளுக்கு இணையாக 15 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டம் ஒரு மாநாடு போல சென்னையில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற விசிக-வின் ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாடு, இந்திய அரசியலுக்கே திருப்புமுனையாக மாறியது.

அந்த மாநாட்டை கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைப்படி ஒருங்கிணைத்து முன்னின்று நடத்தியது வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் டிஜிட்டல் வடிவ பிரச்சாரத்துக்கு அடித்தளமிட்ட வாய்ஸ் ஆஃப் காமன்ஸ், முதல் முறையாக க்யு ஆர் கோட் வடிவ பிரச்சார உத்தியை தேர்தல் களத்தில் அறிமுகம் செய்தது.

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச் சாராய மரணங்களுக்குப் பிறகு, போதைக்கு எதிரான பிரச்சார இயக்கத்தை முன்னின்று நடத்தி வருகிறது வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம். அதன் ஒருபகுதியாக விசிக சார்பில் உளுந்தூர்பேட்டையில் நடந்த மது ஒழிப்பு மாநாடு, கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது.

ஓர் நேர்மையான மக்களுக்கான அரசு அமைய ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறது வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம். வருங்கால சமூகத்தை அரசியல் மயமாக்கி, தேர்தல் அரசியலை அனைவருக்குமான இடமாக வென்றெடுக்கும் ஓர் இயக்கமாக விரைவில் வீரநடைப் போடவுள்ளது வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவில் ஆதவ் அர்ஜுனா தமிழக முதல்வர் ஸ்டாலின், சபரீசன், தேர்தல் வியூக செயல்பாட்டாளர் பிரசாந்த் கிஷோர், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் உடன் இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x