Published : 28 Dec 2023 06:10 AM
Last Updated : 28 Dec 2023 06:10 AM
சென்னை: எண்ணூரில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அங்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட காற்றில் 51 சதவீதம் அதிகமாக அம்மோனியா கலந்திருப்பது தெரியவந்துள்ளது. சென்னை, எண்ணூர் கோரமண்டல் இன்டர்நேஷனல் தொழிற்சாலையில் உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மூலப்பொருளான அம்மோனியா திரவம் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள 12 ஆயிரத்து 500 டன் கொள் திறன் கொண்ட சேமிப்புத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தேவைப்படும் அம்மோனியா திரவம் அவ்வப்போது வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, எண்ணூரில் உள்ள சிறு துறைமுகத்திலிருந்து குழாய்கள் மூலமாகத் திரவ வடிவில் மைனஸ் 33 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் இத்தொழிற்சாலை சேமிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு, உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் நேற்று முன்தினம் (டிச.26) நள்ளிரவு 11.45 மணியளவில் குழாயில் கசிவு ஏற்பட்டு அம்மோனியா வாயு வெளியேறி அருகில் உள்ள பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டன. உடனடியாக அப்பகுதியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அது தொடர்பாகமாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாயுக் கசிவை கண்டறிந்தவுடன், தகுந்த நிபுணர்கள் உடனே வரவழைக்கப்பட்டு, 20 நிமிடங்களில் அந்தத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த வாயுக் கசிவால், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்காக 2 நுரையீரல் நிபுணர்களைக் கொண்டு 5 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
தற்போது குழாயில் அம்மோனியா கசிவு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், சென்னை ஐஐடியை சேர்ந்த நிபுணர்கள், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கையை 24 மணி நேரத்துக்குள் அரசுக்கு சமர்ப்பிக்குமாறும், தனது விரிவான அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வாயு கசிவு ஏற்பட்ட குழாய்களை முற்றிலும் சரிசெய்து,உரிய பரிசோதனை மேற்கொண்டபிறகே, அம்மோனியா கப்பலிலிருந்து இறக்கப்பட வேண்டும் எனத் தொழிற்சாலை நிர்வாகத்துக்குத் அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. காற்றில் 0.57 பிபிஎம் அம்மோனியா வாயு கலந்திருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் வாயு கசிவின்போது, தொழிற்சாலை நுழைவு வாயிலில் 28 பிபிஎம் அம்மோனியா வாயு இருந்துள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 51 சதவீதம் அதிகம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கை வரும் ஜன.2-ம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடும்படி, தீர்ப்பாய பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அம்மோனியா வாயுக் கசிவுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT