Published : 06 Dec 2023 08:37 PM
Last Updated : 06 Dec 2023 08:37 PM

மீள்கிறது தண்ணீரில் மிதக்கும் சென்னை - டாப் 25 அப்டேட்ஸ்

சென்னை வெள்ளம் | படம்: பி.ஜோதி ராமலிங்கம்

866 இடங்களில் வெள்ளம், மீட்பு பணிகளில் 75,000 பேர்!: அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் வழியாக வெள்ள நீர் விரைவாக வடிந்து வருவதாகவும், வெள்ள பாதிப்பு பணிகளில் 75,000 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 866 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 4 சதவீத பகுதிகளுக்கு மட்டுமே இன்னும் மின் விநியோகம் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2500 கனஅடி தண்ணீர் மட்டும் தற்போது திறக்கப்படுகிறது. அடையாறு ஆறிலிருந்து கடலுக்குச் செல்லும் முகத்துவாரப் பகுதி நன்றாக திறந்தநிலையில் உள்ளது. அந்தப் பகுதியில் 4 இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப முகத்துவாரப் பகுதியை திறப்பதற்கு. அதேபோல் கூவம் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் நல்லபடியாக பாய்ந்தோடி வருகிறது.

இருந்தாலும், ஒருசில பகுதிகள் குறிப்பாக தென் சென்னையில் பெரும்பாக்கம், மடிப்பாக்கம், செம்மஞ்சேரி, பள்ளிக்கரனை, வேளச்சேரி போன்ற பகுதிகளில் தண்ணீர் இன்னும் இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தமாக 866 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த இடங்களில் இருந்து 19 ஆயிரத்து 86 பேர் படகு உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். NDRF, TNSDA-வைச் சேர்ந்த 36 மீட்பு குழுக்களைச் சேர்ந்த 850 பேர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளச் சேதங்களை மதிப்பிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த மழை வெள்ள பாதிப்புகளில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

ரூ.5,060 கோடி இடைக்கால நிவாரணம்: முதல்வர் கடிதம்:தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, பிரதமரை நேரில் சந்தித்து வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், ‘சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழை பொழிந்தது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தன்னார்வலர்களுக்கு அழைப்பு: மிக்ஜாம் வெள்ள நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தன்னார்வலக் குழுக்கள், அமைப்புகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை 9791149789, 9445461712, 9894540669, மற்றும் 7397766651 வாட்ஸ்அப் எண்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை”: சென்னையில் நிலவும் கடும் பால் தட்டுப்பாடு காரணமாக, கூடுதல் விலைக்கு யாரேனும் பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் தொடரும் மீட்புப் பணிகள்: மிக்ஜாம் புயலால் கனமழை வெளுத்து ஓய்ந்த நிலையிலும் சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொது மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு: கடந்த 3 தினங்களாக மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிச.4 முதல் டிச.7 வரை இருந்த நிலையில், மேற்காணும் சூழலின் காரணமாக அபராதத் தொகை இல்லாமல் டிச.18 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே, மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் டிச.4 முதல் டிச.6 வரை அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், டிச.9-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடையாறு கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை நீடிப்பு: மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை பெருநகரில் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை: புயல் - வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி நாளை வியாழக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த 4 மாவட்டங்கள் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்: தமிழகம், ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரியில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘டேஞ்சர்’ டிசம்பர்கள்... - மிக்ஜாம் புயல் சென்னையை மிரட்டிப், புரட்டிப் போட்டுள்ளது. இந்தப் புயலால் வட தமிழகம் மட்டுமல்ல, தெற்கு ஆந்திராவும் பெரிய அளவில் சேதங்களை சந்தித்துள்ளது. மிக்ஜாம் தீவிரப் புயலாகி உருவானதாலேயே பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இதுபோல் சமீப காலங்களில் பெரும்பாலான புயல்கள் தீவிரப் புயலாக உருவானதன் பின்னணி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. | விரிவாக வாசிக்க > ‘டேஞ்சர்’ டிசம்பர்கள்... மிக்ஜாம் புயலால் தீவிர மழை பாதிப்பு ஏன்? - வல்லுநர்களின் பார்வை

‘தமிழகத்துக்கு வெள்ள நிவாரண ஒதுக்கீடு கருணை அல்ல, கடமை’:“வரலாறு காணாத மழைப்பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான கடமையை மத்திய அரசு செய்திட வேண்டும். தமிழக அரசு கோரியுள்ள ரூ.5060 கோடி இடைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும், தமிழகத்துக்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்பி மழை, வெள்ளம் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து உரிய வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

“சென்னையில் ரூ.25 பால் பாக்கெட் ரூ.100 வரை விற்பனை”: “மிக்ஜாம் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படைத் தேவையான பால் கிடைக்கவில்லை. ஒரு சில இடங்களில் பால் கிடைத்தாலும் ரூ.25 மதிப்புள்ள பால் பாக்கெட் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழையால் உணவு கிடைக்காத நிலையில் பால் மட்டு்மே பசியைப் போக்கும் தீர்வாக உள்ளது. குறிப்பாக குழந்தைகள் உள்ள குடும்பங்களில் பால் தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது. ஆனால், பால் பாக்கெட்டுகளைக் கூட தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்படாதது வருத்தமளிக்கிறது. அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பாஜக அடுக்கும் கேள்விகள் @ சென்னை வெள்ளம்: “மழைநீர் பாதிப்பு குறித்து திட்டமிடுவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்ட நிலையில், இந்த நிதியாண்டில் ஒருமுறை கூட அந்தக் குழு கூடவில்லை என்று சொல்லப்படுகிறதே? அப்படி கூடியிருந்தால் அதன் பரிந்துரைகள் என்ன? கூடவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன என்பதை அரசு விளக்குமா?" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: சீமான்: “எந்தக் காலத்திலும் இனி சென்னை வெள்ளக்காடாக மாறாவண்ணம் தடுக்கும் விதத்தில் நகரக் கட்டுமானத்தையும், வடிகால் அமைப்பையும் உருவாக்க வேண்டும். வடிகால் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏறக்குறைய 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் தலா ரூ.10,000 வழங்குக: ராமதாஸ்: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சென்னை மாநகர மக்களின் வாழ்வாதார இழப்பை ஓரளவாவது போக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் தலா ரூ.10,000 நிதி உதவி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை வெள்ள பாதிப்பு: உயர் நீதிமன்றத்தில் முறையீடு: சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

சந்தோஷ் நாராயணன் வேதனைப் பகிர்வு: “அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழை நீர் மற்றும் கழிவுநீரை ஒரே ஒரு பாசனக் கால்வாயில் சென்று சேர்வதற்கு வழிவகுத்துள்ளது. அது ஒவ்வொரு முறையும் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் குடியிருப்புகளை தாக்குகிறது” என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

‘ரூ.20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் சேதம்’: தனது ‘தேசாந்திரி’ பதிப்பகத்தின் குடோனுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் ரூ.20 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் சேதமானதாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.

‘பார்க்கிங்’ பட இயக்குநர், தயாரிப்பாளர், ஹரிஷ் கல்யாண் நிதியுதவி: மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக நடிகர் ஹரிஷ் கல்யாண் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோரும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

குடிநீர் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு: பொதுமக்கள் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்களை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வாயிலாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் பெற பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 மற்றும் 044-45674567 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். தெருநடைகள், குடிநீர் வாரியத்தின் குடிநீர்த் தொட்டிகள் மற்றும் பொது பயன்பாட்டிற்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட சென்னை முதல் தாம்பரம் வரை: மிக்ஜாம் புயல் கடந்து சென்றாலும், அதிகனமழை ஓய்ந்தபோதிலும், அதன் பாதிப்புகள் இன்னும் வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பழைய வண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர் உள்ளிட்ட பகுதிகளை விட்டுச் செல்லவில்லை. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்கூறியுள்ள பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் வெளியே கூட வர முடியாமல் தவிக்கின்றனர். இரண்டு நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியாமல் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதி முழுவதுமாக தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள். | விரிவாக வாசிக்க > வட சென்னை முதல் தாம்பரம் வரை: இயல்பு நிலை திரும்பாத வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் - ஒரு பார்வை

முதல்வர் ஸ்டாலின் உத்தரவு: மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளை மேலும் தீவிரப்படுத்த கூடுதலாக அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழு விவரம்: மிக்ஜாம் நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

மத்திய அமைச்சர் வருகை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை சென்னை வருகிறார். மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வலத் துறை இணையமைச்சர் எல்.முருகனும் உடன் வருகிறார். இவர்கள் மழை வெள்ளம் மற்றும் புயலால் ஏற்பட்ட சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள். மத்திய அமைச்சர்களுடன் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசும் வெள்ள சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்வார். பின்னர், மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வெள்ளச் சேதங்கள் பற்றி கேட்டறிய உள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x