சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூரில் மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு: அரசு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் மின் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் டிச.18-ம் தேதி வரை செலுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த டிச.3 அன்று தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவெடுத்து டிச.4 அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 3 தினங்களாக மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வரின் ஆணைப்படி, மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிச.4 முதல் டிச.7 வரை இருந்த நிலையில், மேற்காணும் சூழலின் காரணமாக அபராதத் தொகை இல்லாமல் டிச.18 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே, மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் டிச.4 முதல் டிச.6 வரை அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in