Published : 06 Dec 2023 01:06 PM
Last Updated : 06 Dec 2023 01:06 PM

“சென்னையில் ரூ.25 பால் பாக்கெட் ரூ.100 வரை விற்பனை” - தட்டுப்பாட்டை போக்க அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ்

சென்னை: “மிக்ஜாம் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படைத் தேவையான பால் கிடைக்கவில்லை. பால் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மிக்ஜாம் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படைத் தேவையான பால் கிடைக்கவில்லை. ஒரு சில இடங்களில் பால் கிடைத்தாலும் ரூ.25 மதிப்புள்ள பால் பாக்கெட் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழையால் உணவு கிடைக்காத நிலையில் பால் மட்டு்மே பசியைப் போக்கும் தீர்வாக உள்ளது. குறிப்பாக குழந்தைகள் உள்ள குடும்பங்களில் பால் தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது. ஆனால், பால் பாக்கெட்டுகளைக் கூட தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்படாதது வருத்தமளிக்கிறது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு இன்று இரண்டாவது நாளாக பால் இலவசமாக வழங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்திருந்தாலும் கூட, பெரும்பான்மையான பகுதிகளில் பால் வழங்கப்படவில்லை. சில பகுதிகளில் மட்டும் அரசு சார்பில் வழங்கப்பட்ட பால் பாக்கெட்டுகளை தாங்கள் வழங்குவதாகக் கூறி ஒரு சில வீடுகளுக்கு மட்டும் திமுகவினர் வழங்கினார்கள். கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் 90% வீடுகளுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட இலவச பால் வழங்கப்படவில்லை.

ஆவின் பால் விற்பனை நிலையங்களில் பால் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை தான் காணப்படுகிறது. மக்களின் விரக்தியும், ஏமாற்றமும் கோபமாக மாறுவதற்கு முன் பால் தட்டுப்பாடு போக்கப்பட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x