

சென்னை: “மழைநீர் பாதிப்பு குறித்து திட்டமிடுவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்ட நிலையில், இந்த நிதியாண்டில் ஒருமுறை கூட அந்தக் குழு கூடவில்லை என்று சொல்லப்படுகிறதே? அப்படி கூடியிருந்தால் அதன் பரிந்துரைகள் என்ன? கூடவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன என்பதை அரசு விளக்குமா?" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும், சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன என்றும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழகத்துக்கு இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ.5060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.ஒரு முதல்வராக கோரிக்கை வைப்பது அவரின் கடமை மற்றும் பொறுப்பு. அதே நேரம் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட மத்திய அரசின் குழு உறுதியாக வரும். ஆனால், சில கேள்விகளுக்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்.