Published : 06 Dec 2023 07:42 PM
Last Updated : 06 Dec 2023 07:42 PM
சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளை மேலும் தீவிரப்படுத்த கூடுதலாக அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான தமிழக அரசின் செய்தி குறிப்பு: “மிக்ஜாம் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழை பாதிப்பு காரணமாக, சென்னை நகரில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர்களை நியமித்து 4.12.2023 அன்று ஆணை வெளியிடப்பட்டது. இப்பணிகளை மேலும் தீவிரப்படுத்த ஏற்கெனவே நியமிக்கப்பட்ட அமைச்சர்களுடன், பின்வரும் கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
அதன் விவரம்: சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் பகுதிகளுக்கும்; சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கும்; பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் இராயபுரம் பகுதிக்கும்; ஏற்கனவே நியமிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வில்லிவாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், கே.கே. நகர் ஆகிய பகுதிகளுடன் கூடுதலாக அரும்பாக்கம் பகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை, எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணித்து, அலுவலர்களுக்கு மீட்புப் பணிகளுக்குத் தேவையான உத்தரவுகளை வழங்கி, மீட்பு மற்றும் நிவாரணப் பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுடன், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான செய்திகளை சேகரித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து மீட்புப் பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவையும் நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் ஆகியோரை திருவொற்றியூர் பகுதிக்கு நியமித்து நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT