Published : 06 Jul 2023 04:07 AM
Last Updated : 06 Jul 2023 04:07 AM
போடி: சமுதாயத்தை மது குடிப்பழக்கத்துக்கு ஆட்படுத்தி கொல்வதும் இனப்படுகொலைதான் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தேனி மாவட்டம் போடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் அரசியலுக்கு வந்து 13 ஆண்டுகளாகின்றன. என் வழி, தனி வழி. நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். விவசாயத்தை அரசு வேலையாக மாற்றுவேன் என்பது எனது கருத்து. இது போன்ற கொள்கைகளை எல்லாம் கூட்டணி கட்சிகள் ஏற்குமா? ஆகவே, நான் தனித்தே செயல்படுவேன். தமிழகத்திலிருந்து கேரளா கர்நாடகாவுக்கு கனிம வளம் கடத்தப்படுகிறது.
ஆனால் அவர்களோ அங்குள்ள மலைகளை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு மலையிலும் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். குடிநீரை விலைக்கு வாங்குவதை எப்படி வளர்ச்சி என்று சொல்ல முடியும். காய்கறிகளை நீங்கள் அண்டை மாநிலங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதால்தான் இங்கே விளைவிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
சிகிச்சைக்கு வந்த சிறு பிள்ளையின் கையை வெட்டி விட்டீர்கள். இந்த அளவுதான் உங்கள் அரசின் சாதனை இருக்கிறது. மது குடிக்கும் பழக்கத்தை அதிகரிக்க அரசே திட்டமிடுவதை எப்படி சாதனை என்று சொல்ல முடியும். சமுதாயத்தை குடிப்பழக்கத்துக்கு ஆட்படுத்தி கொல்வதும் இனப் படுகொலைதான். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT