Published : 17 Oct 2019 10:58 AM
Last Updated : 17 Oct 2019 10:58 AM

பாடம் சுமையல்ல: ‘நிறை’களில் வேண்டாம் குறை!

பாடங்களை படிக்கும்போது சில இடங்களில் கடினமாகவோ, குழப்பமாகவோ இருப்பது உண்டு. அத்தகைய சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளாமல் குழப்பத்துடனேயே படிக்கும்போது அது சுமையாக மாறும். இத்தகைய சூழலில்தான் மனப்பாடம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். இதைத்தவிர்த்து பாடவாரியாகக் கடினமாகவும் குழப்பமாகவும் உணரும் பகுதிகளை, ஆசிரிய வல்லுநர் உதவியுடன் எளிமையாக்கும் பகுதி இது.

10-ம் வகுப்பு அறிவியல் பாடம்

அலகு 7: அணுக்களும் மூலக்கூறுகளும்

இப்பாடத்தின் தொடக்கமாக அணு மற்றும் மூலக்கூறு தொடர்பாகப் படிக்கும்போது, ‘நிறை’ என்ற பதம் 5 இடங்களில் வருகிறது. அணுநிறை, ஒப்பு அணு நிறை, மூலக்கூறு நிறை, ஒப்பு மூலக்கூறு நிறைமற்றும் சராசரி அணு நிறை என்பதாக அவை அமைந்துள்ளன.அனைத்திலுமே நிறை என்பது இடம்பெற்றிருப்பதால், படித்து புரிந்துகொள்ள சில மாணவர்கள் சிரமப்படுவார்கள். அனைத்தையும் படித்திருந்தாலும் விடையாக எழுதும்போது ஒன்றுக்கொன்று மாற்றி எழுதி விடுகிறார்கள். இக்குழப்பத்தை தவிர்க்க இந்த 5 தலைப்பிலான வினாக்களை கீழ்க்கண்ட வரிசையில் ஒப்பிட்டும் தொகுத்தும் படிப்பது உதவும்.

அணு நிறை, மூலக்கூறு நிறை ஆகியவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் படிப்பது நினைவில் நிறுத்த உதவும். அதேபோல் ஒப்பு அணு நிறை, ஒப்பு மூலக்கூறு நிறை ஆகியவற்றை தனியாக ஒப்பிட்டு படிக்கலாம். இந்த இரண்டு ஜோடி வினாக்களுக்கும் அப்பாற்பட்டதாகச் சராசரி அணு நிறையை தனியாகப் படிக்கலாம்.

சதவீதப் பரவலில் சறுக்கல்

சராசரி அணு நிறையைத் தொடர்ந்து அது தொடர்பான கணக்கீடுகள் வருகின்றன. அந்த கணக்குகளில் ‘சதவீத பரவல்’ என்ற பிரயோகத்தை மாணவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு, கணக்குகளை தீர்க்க முற்படுகிறார்கள்.

சதவீதப் பரவல் என்பது அவர் களுக்கு புதிய சொல். பக்கம்: 94, எ.கா. கணக்கு 2 என்பதில் ‘போரான் 10-ன் சதவீதப் பரவல் 20’ என்பதை X20 எனத் தவறாக எழுதிக் கணக்கிட ஆரம்பிக்கிறார்கள். சதவீதப் பரவல் என்பதை சதவீதம் என்பதாக புரிந்துகொள்கிறார்கள். ‘போரான் 10-ன் சதவீதப் பரவல் 20’ என்பதை 10X என்று எழுதியே கணக்கிட வேண்டும். கணக்கின் தீர்க்கப்பட்ட விடையில் வித்தியாசம் இருக்காது என்றபோதும், எடுத்து எழுதும்போது தவறு செய்வது மதிப்பெண் குறைய வாய்ப்பாகும்.

இவ்வாறு பாடக்கருத்துகளில் தவறு நேர வாய்ப்புள்ளதை மாணவர்கள் விளங்கிக் கொண்டாலே அந்த தவறை அடுத்த முறை எளிதாகத் தவிர்த்துவிடலாம்.

‘முறை’யாகப் படிப்போம்

தொடர்ந்து வரும் ‘மோல்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் பல்வேறு முறைகள்’ (பக்கம்: 97) என்பதில், 4 வெவ்வேறு முறைகள் இடம்பெற்றுள்ளன. கொடுக்கப்பட்ட விவரங்களைப் பொறுத்தே இந்த நான்கில் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்து கணக்கிட வேண்டும். இவற்றிலும் மாற்றி எழுதும் குழப்பத்தால் தவறிழைக்க நேரிடுகிறது.

ஐயமின்றி கல்

பாடங்களில் ஐயம் இன்றியும், குழப்பம் இன்றியும் கற்பதே அடிப்படையானது. வகுப்பறையில் பாடம் நடத்தப்படும்போதே கூர்ந்து கவனிப்பது, எழும் ஐயங்களை ஆசிரியரிடம் அப்போதைக்கே போக்கிக்கொள்வது, அன்றைக்கே பாடங்களைப் புரிந்து படிப்பது, படித்ததை அவ்வப்போது திருப்புதல் செய்வது, வகுப்பு தேர்வுகள் பருவத் தேர்வுகளுக்கு அப்பால் சுயமாகவும் அடிக்கடி எழுதிப் பார்த்து தவறுகளை திருத்திக் கொள்வது போன்றவை பாடங்களின் சுமையை வெகுவாக குறைக்க உதவும்.

பாடப்பொருள் விளக்கம் வழங்கியவர்: எஸ்.மாலதி, பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்), அரசு மேல்நிலைப்பள்ளி,
வீரகேரளம்புதூர், திருநெல்வேலி மாவட்டம்.

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x