Last Updated : 16 May, 2024 09:30 PM

 

Published : 16 May 2024 09:30 PM
Last Updated : 16 May 2024 09:30 PM

வரும் கல்வியாண்டு முதல் ‘எமிஸ்’ வலைதளப் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க திட்டம்

சென்னை: வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எமிஸ் வலைத்தள பணிகளில் இருந்து விடுவிக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு விதமான நடவடிக்கைகள் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) எனும் இணையதளத்தில் அரசு, அரசு உதவி, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் முழு விவரங்கள் பராமரிக்கப்பட்டு, அதற்கேற்ப நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் தினசரி செயல்பாடுகளும் எமிஸ் தளம் வழியாக கண்காணிக்கப்படுகிறது.

அதேநேரம் இந்த எமிஸ் தளத்தில் தகவல்கள் பதிவேற்றம், நீக்கம் உட்பட பராமரிப்பு பணிகள் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது கூடுதல் பணிச்சுமையாக இருப்பதால் இதிலிருந்து விடுவிக்க வேண்டுமென ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அரசின் அறிவிப்புகள், திட்டங்களை பெற்றோருக்கு பகிர்வதற்காக வாட்ஸ்-அப் வழியாக ஒரு தளத்தை உருவாக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக எமிஸ் தளத்தில் உள்ள மாணவர்களின் பெற்றோர் தொடர்பு எண்கள் தற்போது ஆசிரியர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு சரிபார்க்கும் போது ஓடிபி எனப்படும் ஒரு முறை கடவுச்சொல் எண் பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கு வரும். ஆனால், பாதுகாப்பு கருதி செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை கொடுக்க பெற்றோர்கள் பலர் தயங்குவதாக தெரிகிறது. இதனால் ஆசிரியர்கள் இந்த பணிகளை முடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சில பெற்றோர், ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, பெற்றோர் செல்போன் எண் சரிபார்ப்பு பணியை பள்ளிக் கல்வித் துறை கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “எமிஸ் தளத்தில் விவரங்களை பதிவிடுவதற்கான பணிகளில் ஆசிரியர்களை இனி ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். இதற்காக வரும் கல்வியாண்டில் ஒப்பந்த அடிப்படையில் 6 ஆயிரம் அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர், அவர்கள் எமிஸ் தளத்தில் தரவுகளை பதிவு செய்யும் பணிகளை மேற்கொள்வார்கள். பெற்றோர்களின் செல்போன் எண் சரிபார்ப்பு பணிகளில் உள்ள நடைமுறை சிரமங்களை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x