Published : 14 May 2024 11:14 PM
Last Updated : 14 May 2024 11:14 PM

டீ, காபி குடிப்பவர்கள் கவனத்துக்கு -  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை

புதுடெல்லி: உணவுக்கு முன்பும் பின்பும் டீ,காபி அருந்துவதை தவிர்க்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியர்கள் அதிகம் விரும்பி அருந்தும் பானங்களில் டீ மற்றும் காபி முதலிடம் வகிக்கின்றன. வெயில், குளிர், மழை என எந்த பருவநிலையாக இருந்தாலும் இந்திய மக்களில் பெரும்பாலானோர் டீ,காபி குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கடும் வெயில் காலத்திலும் கூட இந்தியாவில் டீக்கடைகளை கூட்டம் நிற்பதை பார்க்கமுடியும்.

நிலைமை இப்படியிருக்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதன் கிளை அமைப்பான தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து இந்திய மக்களுக்கான 17 உணவு வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதில் டீ,காபி குடிக்கும் பழக்கம் அளவாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டீ மற்றும் காபியில் காஃபின் (caffeine) கலந்திருப்பதால், அது மத்திய நரம்பு மண்டலத்தையும் மற்றும் உடலியல் சார்புநிலையைத் தூண்டுகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் டீ,காபியை முற்றிலுமாக தவிர்க்குமாறு அதில் குறிப்பிடப்படவில்லை. அவற்றில் காஃபின் கலந்திருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு 150 மி.லி. காய்ச்சிய காபியில் 80-120 மி.கி. காஃபின் உள்ளது. இன்ஸ்டன்ட் காபியில் 50-65 மி.கி. மற்றும் தேநீரில் 30-65 மி.கி. காஃபின் உள்ளது.

ஒரு நாளைக்கு 300 மி.கி காஃபினுக்கு மேல் உட்கொள்வது உடல்நலத்துக்கு உகந்தது அல்ல என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே போல உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரம் முன்னும், பின்னும் டீ,காபி அருந்துவதை தவிர்க்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த பானங்களில் உள்ள டானின் என்ற பொருள், உணவிலிருந்து நம் உடல் எடுத்துக் கொள்ளும் இரும்புச் சத்தின் அளவை குறைக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பால் கலக்காத தேநீர் குடிப்பது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கரோனரி தமனி நோய் மற்றும் வயிற்றுப் புற்று நோய் அபாயத்தை கட்டுப்படுத்துவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமாக காபி குடிப்பது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயதுடிப்பு தொடர்பான சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x