Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

நிவர், புரெவி புயல், கனமழை பாதிப்புகளை கணக்கிட்டு அரசுக்கு விரைவில் அறிக்கை அளிக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு

மாவட்ட நிர்வாகங்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்றி செயல்பட்டதால் கரோனா பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்தார். நிவர், புரெவி புயல், கனமழை பாதிப்புகளை கணக்கெடுத்து அரசுக்கு உடனடியாக அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் கரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிகிறது. மத்திய அரசு பிப்ரவரி 28-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கரோனா தடுப்பு சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், அனைத்து துறை செயலாளர்கள் பங்கேற்றனர். ஆட்சியர்கள் காணொலி வாயிலாக பங்கேற்று, தங்கள் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நிலவரங்களை தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர்களுடன் நானும், தலைமைச் செயலாளரும் நடத்திய ஆய்வுக் கூட்டங்கள், நான் நேரடியாக 36 மாவட்டங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்கள் மூலமாக மாவட்ட நிர்வாகங்களுக்கும், சுகாதாரத் துறைக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதனால் கரோனா பரவல் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாட்டு சிகிச்சை, நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு இதுவரை ரூ.7,605 கோடி செலவழித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 7.05 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 3.69 கோடி பேர் பங்கேற்றனர். அதில் 13.58 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அறிகுறி தென்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை 1.58 கோடி பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மினி கிளினிக்

தமிழகம் முழுவதும், ஒரு மருத்துவர், செவிலியர், ஓர் உதவியாளருடன் 2 ஆயிரம் மினி கிளினிக் தொடங்க அறிவிக்கப்பட்டு இதுவரை 782 கிளினிக் தொடங்கப்பட்டுள்ளன. மற்றவை விரைவில் தொடங்கப்படும்.

இங்கிலாந்தில் பரவிவரும் புதுவிதமான கரோனா தொற்று தமிழகத்துக்கு பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 1.60 கோடி பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 88,467 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா காலத்திலும் 74 புதிய தொழில்கள் உருவாகும் வகையில் ரூ.61,500 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 3.09 லட்சம் சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.11,539 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவிக்கும் ஆலோசனைகளை ஆட்சியர்கள் பின்பற்றியதால், பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா தொற்று மிக மிக குறைந்துள்ளது. ஒருசில மாவட்டங்களில் இன்னும் அதிக கவனம் செலுத்தி கரோனா பரவலை தடுக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு பணிகளும் முடுக்கிவிடப்பட்டு வேகமாக நடைபெற வேண்டும். பல ஆண்டுகளாக வசிக்கும் வீட்டுமனைக்கு பட்டா வழங்கவும், பட்டா மாற்ற விண்ணப்பங்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் ஏற்படும் சூழல் உருவாகக் கூடாது.

பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதால் மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறையும் தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மக்கள் குறைதீர்வு கூட்டங்களை திங்கள்கிழமைகளில் உரிய பாதுகாப்புடன் தொடரலாம். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை வேகமாக செயல்படுத்த வேண்டும்.

நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க அரசு தயாராக உள்ளது. எனவே, மானாவாரி, நெற்பயிர் விவசாயிகளுக்கான பாதிப்பை மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை அதிகாரிகள் கவனமாக கணக்கீடு செய்து அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். டெல்டா மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கனமழையால் தண்ணீரில் மூழ்கி முளைத்துவிட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பயிர் பாதிப்புகளை கண்டறிந்து உடனடியாக அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், அடுத்தகட்ட ஊரடங்கு நீட்டிப்பு, புதிய சிகிச்சைமுறைகள் உள்ளிட்டவை குறித்துமுதல்வர் ஆலோசனை நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x