Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் - தமிழகத்தில் கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது : சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்டகட்டுப்பாடுகளால் தமிழகத்தில் கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையத்தை சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஆல்பி ஜான், மாநகரநல அலுவலர் ஜெகதீசன் ஆகியோர்உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் கடந்த 2 நாட்களில் கரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. பொதுமக்கள் அடுத்த ஒரு வாரத்துக்கு முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, தேவையில்லாமல் பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது போன்றவற்றைப் பின்பற்றினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சென்னையில் 12 இடங்களில் காய்ச்சல் கண்காணிப்பு மையங்கள்உள்ளன. அங்கு சிடி ஸ்கேன், ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டு, நோயாளிகள் பிரிக்கப்படுகின்றனர்.லேசான தொற்று உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டியதில்லை. வீட்டிலேயோ, கரோனா கண்காணிப்பு மையத்திலோ சிகிச்சை பெறலாம்.

கூடுதலாக 12 ஆயிரம் ஆக்சிஜன்படுக்கைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தவார இறுதிக்குள் 2 ஆயிரம் படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். தற்போதைய நிலையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுமையாக நிரம்பவில்லை. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் இரவு நேரங்களில் நேரடியாக அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.அவர்கள்முதலில் காய்ச்சல் மையத்துக்கு செல்ல வேண்டும்.

தற்போது பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். 5 சதவீத தடுப்பூசி மட்டுமேவீணாகிறது. மே 1 முதல் 18 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். அதன்பின், தடுப்பூசி வீணாவது முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும்.

தமிழகத்தில் தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ‘ரெம்டெசிவிர்’ உள்ளிட்ட மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் ‘ரெம்டெசிவிர்’ உள்ளிட்ட மருந்துகளை விற்பனைசெய்ய மருந்தகம் தொடங்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் உறவினர்கள் உரிய ஆவணத்துடன் வந்து மருந்துகளை வாங்கிச் செல்லலாம். மற்ற இடங்களிலும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும்.

செங்கல்பட்டு தேசிய தடுப்பூசி மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அதன்மூலம் நமது தடுப்பூசி பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இவைதவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x