Published : 28 May 2024 04:29 AM
Last Updated : 28 May 2024 04:29 AM

எவரெஸ்ட் சிகரத்தில் அலைமோதும் கூட்டம்

எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதிக்க, ஆபத்தான பனிமலையில் ஒருவர் பின் ஒருவராக முன்னேறி செல்லும் வீரர்கள்.

புதுடெல்லி: எவரெஸ்ட் சிகரத்தில் சாகசவீரர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் இமயமலையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, அக்டோபர், நவம்பர் மாதங்களில் சாகச வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுகின்றனர். பொதுவாக நேபாள நாட்டில் உள்ள அடிவார முகாமில் இருந்து மலையேற்றம் தொடங்குகிறது. இந்த ஆண்டில் மே 21-ம் தேதி வரை நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுமார் 900 மலையேற்ற வீரர்கள் பதிவு செய்தனர். இதில் 268 பேர் மட்டும் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு சாதனை படைத்து உள்ளனர். மற்றவர்கள் பாதி வழியில் திரும்பிவிட்டனர்.

இந்த சூழலில் எவரெஸ்ட்சிகரத்துக்கு ஏறியவர்களின் வீடியோவை இந்தியாவை சேர்ந்த ராஜன் துவிவேதி கடந்த மே 20-ம் தேதி சமூகவலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதில் ஏராளமான வீரர்கள் கயிறு உதவியுடன் ஒருவர் பின் ஒருவராக மலையேறி செல்கின்றனர். எறும்பு கூட்டம் ஊர்வதை போன்று மிக நீண்ட வரிசையில் சாகச வீரர்கள் மலையேறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவுடன் ராஜன் துவிவேதி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் இருந்து சுமார் 500 வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சி செய்தோம். இதில் 250 முதல் 300 பேர்வரை மட்டுமே எவரெஸ்டை தொட்டனர்.

உறையவைக்கும் குளிரில் பனிமலையில் ஏறுவது சாதாரண விஷயம் கிடையாது. பனியால் கண் பார்வை பாதிக்கப்படும். மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது வாழ்வா, சாவா என்ற வகையில் இருக்கும். இவ்வாறு ராஜன் துவிவேதி தெரிவித்துள்ளார்.

நேபாள அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்த ஆண்டு இதுவரை 414 வெளிநாட்டினர் எவரெஸ்ட் மலையில் ஏற பதிவு செய்தனர். அவர்களுக்கு உதவியாக நேபாளத்தை சேர்ந்த 500 வழிகாட்டிகளும் உடன் சென்றனர். ஒட்டுமொத்தமாக 900-க்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் சிகரம் செல்ல மலை ஏறினர்.

முதலில் மலையேற்ற பயிற்சி பெற்ற சிறப்பு குழுவினர் இமயமலையில் ஏறி கயிறுகளை கட்டுவார்கள். அந்த கயிறுகளின் உதவியுடன் மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவர்கள். எவரெஸ்ட் சிகரத் தின் மீது ஏறியபிறகு 10 நிமிடங்கள் வரை சிகரத்தின் மீது இருக்க அனுமதி வழங்கப்படும்.

தற்போது மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் 2 நிமிடங்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தின் மீது இருக்க அனுமதி வழங்கப்படுகிறது.

மலையேற்றத்தின்போது பனிச்சரிவு உள்ளிட்ட பல்வேறு விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஏற்பட்டபனிச்சரிவில் பிரிட்டனை சேர்ந்த ஒருவரும், நேபாளத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இவ்வாறு நேபாள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x