Published : 28 May 2024 04:28 PM
Last Updated : 28 May 2024 04:28 PM

“தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா?” - அமித் ஷா

ஜாஜ்பூர்(ஒடிசா): ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா என அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் பொக்கிஷ அறையின் சாவி குறித்த விசாரணை அறிக்கையை நாங்கள் பகிரங்கப்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்,

ஒடிசாவின் ஜாஜ்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “ஒடிசாவில் பாஜக வெற்றி பெற்றால், மாநில இளைஞர்கள் வேலை தேடி இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படாது. ஓராண்டில் 1.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். அனைத்து விவசாயிகளின் நெல்லையும், குவிண்டாலுக்கு ரூ.3,100க்கு அரசு கொள்முதல் செய்யும். சுபத்ரா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். ஒவ்வொரு மீனவருக்கும் ஆண்டு உதவித் தொகையாக ரூ.10,000, நெசவாளர் உதவித் தொகையாக ரூ.3,000 வழங்கப்படும்.

புரி ஜகந்நாதரின் பொக்கிஷ அறையின் ஒரிஜினல் சாவி எங்கே என முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் கேட்க விரும்புகிறேன். சாவி காணாமல் போனது குறித்த விசாரணை அறிக்கை ஏன் பகிரங்கப்படுத்தவில்லை? பிஜூ ஜனதா தள அரசு யாரைக் காப்பாற்ற முயல்கிறது? ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் பொக்கிஷ அறையின் சாவி குறித்த விசாரணை அறிக்கையை நாங்கள் பகிரங்கப்படுத்துவோம்.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை ஒடிசாவின் முதல்வராக திணிக்க நவீன் பட்நாயக் முயல்கிறார். நவீன் பாபு, நாங்கள் உங்களை பொறுத்துக்கொண்டோம், ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த அந்த நபரை(வி.கே. பாண்டியன்) நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். ஒடியாவில் பேசக்கூடிய மற்றும் ஒடிசாவின் கலாச்சாரத்தை மதிக்கக்கூடிய ஒரு முதல்வர் ஒடிசாவுக்கு கிடைக்க வேண்டுமா? அல்லது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களை ஆள வேண்டுமா என்பதை வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசுவதை காங்கிரஸ் தவிர்க்கிறது. ஏனெனில், பாகிஸ்தானைக் கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. நேற்றும், இன்றும், நாளையும் அது இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாங்கள் திரும்பப் பெறுவோம்.

மக்களவைக்கான 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. ஐந்து கட்டங்களுக்கான அறிக்கைகள் என்னிடம் உள்ளன. இந்த ஐந்து கட்ட வாக்குப்பதிவில் நரேந்திர மோடி 310 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஆறாம்-ஏழாம் கட்டங்களில் 400ஐத் தாண்ட வேண்டும். இத்துடன் ஒடிசாவிலும் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும். ஜூன் 4ம் தேதி, நவீன் பட்நாயக் முன்னாள் முதல்வர் ஆகிவிடுவார்.

ஒடிசாவின் புதிய முதல்வர், ஒடியா பேசக்கூடியவராகவும், இளைஞராகவும் ஜெகந்நாதரின் பக்தராகவும் இருப்பார். ஒடிசா பேசும், ஒடியா எழுதும் முதல்வரை 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒடிசா பெறப் போகிறது” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x