Last Updated : 28 May, 2024 03:35 PM

 

Published : 28 May 2024 03:35 PM
Last Updated : 28 May 2024 03:35 PM

தேவாலய சொத்துக்களை பதிவுத்துறை சட்டத்தின் கீழ் கொண்டு வர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: இந்து கோயில்கள், வஃக்புவாரிய சொத்துக்கள் பத்திரப்பதிவு பதிவு செய்யப்படுவதை தடுப்பது போல், கிறிஸ்தவ தேவலாய சொத்துக்களை பதிவுத்துறை சட்டம்-1908 பிரிவு 22 ஏ-க்குள் கொண்டு வர வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ஷாலின் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் விஜயா என்பவரிடமிருந்து 2023-ல் சொத்து வாங்கினேன். அந்த சொத்தை பதிவு செய்ய திருப்பத்தூர் சார் பதிவாளர் மறுத்துவிட்டார். இது தொடர்பாக சார் பதிவாளர் 29.3.2023-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நான் வாங்கிய சொத்தை உடனடியாக பத்திரப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பத்தூர் சார் பதிவாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், “சென்னை உயர் நீதிமன்றம் 2017-ல் இரு வழக்குகளில் தமிழ் இவாஞ்சலிக்கல் லூத்தரன் சர்ச் (டிஇஎல்சி) சொத்துக்களை உயர் நீதிமன்ற அனுமதி இல்லாமல் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இவற்றின் அடிப்படையில் மனுதாரரின் சொத்து பதிவு விண்ணப்பம் நிராகரக்கப்பட்டது” எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “இந்து கோயில் சொத்துக்கள் இந்த சமய அறநிலையத்துறை சட்டப்படியும், வஃக்போர்டு சொத்துக்கள் வஃக்புவாரிய சட்டப்படியும் பாதுகாக்கப்படுகிறது. கிறிஸ்துவ ஆலய சொத்துக்களை பொறுத்தவரை இதுபோன்ற சட்டம் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. இந்தியா மதசார்பற்ற நாடு. அனைத்து மதங்களையும் சமமாக அணுக வேண்டும். இதனால் தேவாலய சொத்துக்களை பதிவுத்துறை சட்டம் 22-ஏ பிரிவின் கீழ் கொண்டு வர வேண்டும். அதற்கான நேரம் வந்துள்ளது.

டிஇஎல்சி சொத்து வழக்கில் பிரதான மனு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் இடைக்கால உத்தரவுக்கு உயிர் இல்லை. எனவே, தற்போது டிஇஎல்சி சொத்துக்களை பொறுத்தவரை எந்த தடையும் இல்லை. எனவே, திருப்பத்தூர் சார் பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் பத்திரப்பதிவுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x