Published : 23 May 2023 07:12 AM
Last Updated : 23 May 2023 07:12 AM
சென்னை: ஆவின் விற்பனை நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சாக்லேட் வகைகள் கிடைக்கும் வகையில், சாக்லேட் வகைகள் தயாரிப்பை விரிவுப்படுத்த ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, அம்பத்தூரில் ஒரு சாக்லேட் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின் நிர்வாகம்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக தினசரி சராசரி 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பால், கொழுப்பு சத்து அடிப்படையில், பல வகைகளில் பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றது. இதுதவிர, 220-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
அடுத்தகட்டமாக, ஆவின் குடிநீர் நிரப்பிய பாட்டில்களை விற்பனை செய்ய முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. தினசரி ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் பாட்டில்களை தயாரித்து, விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆவினில் சாக்லேட் வகைகள் தயாரிப்பை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அம்பத்தூரில் ஆலை வளாகத்தில் ஒரு சாக்லேட் ஆலைஅமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி மதிப்பில் இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஆவின் விற்பனை நிலையங்களில் தற்போது சில சாக்லேட் வகைககள் தயாரித்து வழங்கப்படுகின்றன. இவை வாடிக்கையாளர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே,ஆவின் சாக்லேட் தயாரிப்பை விரிவுப்படுத்த உள்ளோம்.
அம்பத்தூரில் ஒரு ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இங்கு ரூ.1 கோடியில் இயந்திரங்கள் வாங்கி, சாக்லேட் வகைகள் தயாரிக்க இருக்கிறோம். புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள், பழங்களை பயன்படுத்தி சாக்லேட் வகைகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். கருப்பு, வெள்ளை பார் சாக்லேட் வகைகள் தயாரிக்கப்படும். 10 கிராம் எடை கொண்ட சாக்லேட்டை பாக்கெட்டில் அடைத்து, விற்பனைக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT