Published : 23 May 2023 04:28 AM
Last Updated : 23 May 2023 04:28 AM

புதிய முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணம் - தொழில் நிறுவன தலைவர்களை சந்திக்கிறார்

சென்னை: புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும், அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், முதல்வர் ஸ்டாலின் இன்று அரசு முறைப் பயணமாக புறப்பட்டு சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் விதமாக, வரும் 2030-31ம் நிதி ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மேம்படுத்துவதை இலக்காக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடைய ரூ.23 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்ப்பதுடன், 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் வேண்டும். இந்த நோக்கத்துக்காக பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடுகளை தமிழக தொழில் துறை நடத்தி வருகிறது.

கடந்த 2021 ஜூலை முதல் இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, தமிழகத்தில் ரூ.2.95 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் மற்றும் 4.12 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிஅளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்துக்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவரவும், வரும் 2024 ஜனவரியில் சென்னையில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் அரசுமுறை பயணமாக, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். அவருடன் தொழில் துறை அமைச்சர், அதிகாரிகளும் செல்கின்றனர்.

முதல்வர் இன்று சிங்கப்பூர் சென்று, அந்நாட்டின் போக்குவரத்து தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன், உள்துறை, சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் ஆகியோரை சந்திக்கிறார். அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப், கேப்பிட்டாலேண்டு இன்வெஸ்ட்மென்ட் நிறுவனங்களின் அதிபர்கள், முதன்மை செயல் அலுவலர்களையும் சந்திக்கிறார்.

இன்று மாலை நடக்கும் முதலீட்டாளர் மாநாட்டில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) பேம்டிஎன் (FameTN), டான்சிம், மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை சிங்கப்பூர் பல்கலைக்கழகமான SUTD, சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு, சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்கின்றன. சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சியிலும் முதல்வர் பங்கேற்கிறார்.

ஜப்பானிய முதலீட்டாளர்கள் தமிழகத்தை பெரிதும் விரும்புகின்றனர். சமீபத்தில், உலக அளவில்முன்னணி குளிர்சாதன இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி ரூ.1,891 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஜப்பானின் முன்னணி நிறுவனமான நிசான், பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட்டுடன் இணைந்து சமீபத்தில் ரூ.3,300 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்ததுடன் தொழில் விரிவாக்கமும் செய்தது.

இந்த உறவை மேலும் மேம்படுத்தும் வகையில், முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு, முதலீட்டு குழுவுக்கு தலைமையேற்று ஜப்பான் செல்கிறார். அங்கு முன்னணி தொழில்துறை தலைவர்கள், அரசு அதிகாரிகளை சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். ஜப்பானில் நடைபெறும் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும், பல முன்னணி தொழில் நிறுவனங்களை கொண்டஒசாகாவுக்கும் முதல்முறையாக தமிழக முதல்வர் தலைமையிலான குழு செல்கிறது. ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான, ஜெட்ரோவுடன் இணைந்து அங்கு நடக்க உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார். ஒசாகா வாழ் இந்திய சமூகத்தினர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

டோக்கியோவில் அந்நாட்டு பொருளாதாரம், வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் நிஷூமுராயசுதோஷி மற்றும் ஜப்பான் தொழில் நிறுவனமான ஜெட்ரோதலைவர் இஷிகுரோ நொரிஹிகோ ஆகியோரை முதல்வர்சந்திக்கிறார். 200-க்கும் மேற்பட்டஜப்பானிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பங்கேற்கிறார். இங்கு, கியோகுடோ, ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழகம் - ஜப்பான் இடையிலான நீண்ட நெடிய வரலாற்று உறவு மேலும் வலுவடையும் வகையில் முதல்வரின் இந்த அரசுமுறைப் பயணம் அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மே 31-ம் தேதி சென்னை திரும்புகிறார் முதல்வர்: அரசுமுறை பயணமாக இன்று காலை 11.25 மணிக்கு விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் அங்கு 2 நாட்கள், அதாவது நாளை வரை தங்கியிருக்கிறார். அங்கிருந்து மே 25-ல் ஜப்பான் செல்கிறார். அங்கு 6 நாட்கள் வரை தங்கியிருக்கும் முதல்வர், மே 31-ல் சென்னை திரும்புவார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஏற்கெனவே சிங்கப்பூர் சென்றுவிட்ட நிலையில், துறை செயலர் ச.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர், சிப்காட், திறன் மேம்பாட்டு கழகம், டான்சிம் உள்ளிட்டநிறுவனங்களின் அதிகாரிகளும் முதல்வருடன் செல்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x