Published : 29 Dec 2022 04:45 AM
Last Updated : 29 Dec 2022 04:45 AM
மயிலாடுதுறை: அதிமுக நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது என ஓ.பன்னீர்செல்வம் அணி கொள்கை பரப்புச் செயலாளர் வா.புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, மயிலாடுதுறையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுகவைக் காப்பாற்றும் இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். அவர் டிச.21-ம் தேதி நடத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் போட்டியாக, டிச.27-ம் தேதி பழனிசாமியும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார்.
அவர் எதற்காக அந்தக் கூட்டத்தை நடத்தினார் என அவருக்கே தெரியவில்லை. கொடநாடு கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் பழனிசாமி மீது நிலுவையில் உள்ளன. ஆனால், திமுக அரசுடன் பழனிசாமி ஒப்பந்தம் செய்துகொண்டு, எந்த வழக்கிலும் கைதாகாமல் இருக்கிறார். முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது கொடுக்கப்பட்ட பருப்பு கொள்முதல் ஊழல் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ரேஷன் கடைகளுக்கு சர்க்கரை வாங்கியதிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. ஆனால், தமிழக முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை. ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை தமிழக முதல்வர் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
தேர்தல் அட்டவணையை வெளியிடும்போதுதான் சின்னத்தை யாருக்கு கொடுப்பது என தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் செயல்படும். அதிமுக பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, கட்சி நிதி பாதுகாக்கப்பட்டது. ஆனால், தற்போது கட்சி நிதி தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT