Published : 29 Dec 2022 03:46 AM
Last Updated : 29 Dec 2022 03:46 AM

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பும் சேர்த்து வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நடப்பாண்டு பொங்கலின்போது 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், பொருட்களின் தரம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்ததால், 2023-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு, ரூ.1,000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மட்டும் வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, ரூ.2,357 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் கரும்பு பயிரிட்டுள்ளதாகவும், அரசின் அறிவிப்பால் தங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படும் என்றும், அரசே கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் போராட்டங்கள் நடத்தினர்.

மேலும், அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்குமாறு வலியுறுத்தின.

முதல்வர் தலைமையில் ஆலோசனை: இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.ஆர்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறைச் செயலர் நா.முருகானந்தம், கூட்டுறவு மற்றும் உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், வேளாண் துறைச் செயலர் சி.சமயமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின்னர் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன், கரும்பும் சேர்த்து வழங்குமாறு விவசாயிகளிடம் இருந்து வந்த கோரிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கத்துடன், முழு கரும்பு ஒன்றும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வை, ஜன. 2-ம் தேதிக்குப் பதில் ஜன. 9-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைப்பார். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி ஜன. 3 முதல் 8-ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.71 கோடி கூடுதல் செலவு: இது தொடர்பாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வரும் ஜன. 9-ம் தேதி பொங்கல் பரிசு திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்ததும், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் அரசுக்கு ரூ.71 கோடி வரை கூடுதலாக செலவாகும்.

தமிழகத்தில் 5,600 ஏக்கரில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் 20 சதவீதம் அரசால் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளுக்கான தொகை, வெட்டுக்கூலி, போக்குவரத்துச் செலவு என ஒரு கரும்புக்கு ரூ.33 விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் விவசாயிகளுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை கிடைக்கும்.

வேளாண் கள அலுவலர்கள் ஆங்காங்கே பயிரிடப்பட்ட கரும்பை அடையாளம் கண்டு, அரசுக்குத் தெரிவிப்பார்கள், பின்னர், மாவட்ட ஆட்சியர், வேளாண்மை, உணவு கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கொண்ட குழு கரும்பை கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கும். கரும்பு விநியோகத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கண்காணிக்கும். இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: விவசாயிகள், பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரும் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். இதற்காக முதல்வருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: கடும் நிதி நெருக்கடி நிலவும் சூழலிலும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகள், மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்த முதல்வரைப் பாராட்டுகிறோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், தமிழக விவசாயிகளிடம் இருந்துதான் கரும்பு முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து வாங்கக்கூடாது. கொள்முதலில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய வேண்டும். மேலும், ஒரு கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.35 விலை வழங்க வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு, விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கும்.

கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: விவசாயிகளை மகிழ்வித்த அறிவிப்புக்காக, முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன்: அரசின் அறிவிப்பை வரவேற்பதுடன், நன்றி தெரிவிக்கிறோம். விவசாயிகளுக்கு கட்டுபடியான விலையில் செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும்.

அதிமுக போராட்டம் வாபஸ்: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், "பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என்று அறிவிப்பு, அதிமுகவின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். அதிமுக விவசாயப் பிரிவு சார்பில் திருவண்ணா மலையில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x