Published : 27 Dec 2022 05:51 AM
Last Updated : 27 Dec 2022 05:51 AM

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.6-ல் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் நடக்க உள்ள 46-வது புத்தகக் காட்சி குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் எஸ்.வயிரவன். உடன், செயலாளர் எஸ்.கே.முருகன், பொருளாளர் ஏ.குமரன், துணை இணை செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 46-வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 6-ம் தேதிமுதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. புத்தகக் காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

46-வது சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி 6-ம் தேதிமுதல் 22-ம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜனவரி 6-ம்தேதி மாலை 5.30 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகக்காட்சியை தொடங்கி வைக்கிறார்.புத்தகக் காட்சியின் தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் 2023-ம்ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளையும், தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்குகிறார்.

பபாசி வழங்கும் சிறப்பு விருதுகள்,தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கவுள்ளார். விருது பெறுபவர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும். பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் விழாவில் பங்கேற்கிறார்.

தமிழக அரசின் ஆதரவுடன் ஜனவரி 16-ம் தேதி முதல் 18--ம்தேதி வரை 3 நாட்கள் அதே வளாகத்தில் சென்னை சர்வதேச புத்தகக் காட்சி நடைபெறுகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் பங்கேற்கஉள்ளனர். இந்த புத்தகக் காட்சியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

புத்தகக் காட்சிக்கு 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச புத்தகக் காட்சிக்கு என 30 குளிரூட்டப்பட்ட அரங்குகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. இவைதவிர சிறியஅளவில் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்களுக்காக மினிஅரங்குகளும், திருநங்கை பதிப்பாளர்களுக்கு சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளன.

புத்தகக் காட்சி தினமும் பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரைநடைபெறவுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலான வாசகர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொங்கல் வரை புத்தகக் காட்சி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு சென்றுவருபவர்களுக்கு வசதியாக ஜனவரி 22-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. புத்தகக் காட்சியின் நிறைவு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பங்கேற்கவுள்ளார் என்றனர். பேட்டியின்போது பபாசி பொருளாளர் ஏ.குமரன், துணை இணைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x