Last Updated : 27 Dec, 2022 06:26 AM

 

Published : 27 Dec 2022 06:26 AM
Last Updated : 27 Dec 2022 06:26 AM

உத்தரபிரதேச மாநிலத்தில் ஃபரூகாபாத்தை அடுத்து 2-வதாக புலந்த்ஷெகர் சிறை உணவுக்கு 5 நட்சத்திர அந்தஸ்து

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் புலந்த்ஷெகர் சிறைக் கைதிகளுக்கு அளிக்கும் உணவுக்கு 5 நட்சத்திர அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் இந்த அந்தஸ்தை பெறும் 2-வது சிறை இதுவாகும்.

நாடு முழுவதிலும் உள்ள சிறைச் சாலைகளில் கைதிகளுக்கு விநியோகிக்கப்படும் உணவின் தரம் உரிய அமைப்புகளால் இதுவரை சோதிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில் சமீப காலமாக இப்பணியில் மத்திய அரசின் இந்தியஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) ஈடுபட்டு வருகிறது.

இதில் குறிப்பிட்ட சிறையில் உணவின் தரம், அது தயாரிக்கப்படும் விதம் மற்றும் வினியோக முறை சோதிக்கப்பட்டு, பிறகு அதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த வகையில் மேற்கு உ.பி.யின் புலந்த்ஷெகரில் உள்ள மத்திய சிறைக்கு 5 நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சரியான உணவு வளாகத்துக்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் திரை: இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் புலந்த்ஷெகர் தலைமை சிறை அதிகாரி ஆர்.கே.ஜேஸ்வால் கூறும்போது, ’நாங்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து கேட்டுக் கொண்டதன் பேரில் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் சிறையில் உணவு தயாரிக்க பல இயந்திரங்கள் உள்ளன.

உணவு தயாரிக்கும் பணியில்சுத்தமான மேலாடை, கையுறைகள், தொப்பிகள் அணிந்து பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவு குறித்து டிஜிட்டல் திரையில் அறிவிக்கப்படுகிறது. எங்கள் சிறையின் கொள்ளளவு 960 கைதிகள் மட்டுமே என்றாலும் இங்கு சுமார் 2,600 பேர் உள்ளனர்” என்றார்.

புலந்த்ஷெகர் சிறை வளாகத்தில் விவசாயம் செய்யும் அளவுக்கு நிலமும் உள்ளது. இதில் கைதிகளுக்கு தேவையான காய்கறி பயிரிடப்படுகிறது. நெல், கோதுமை போன்ற பிற தானியங்களும் ஓரளவு பயிரிடப்படுகிறது. இதற்காகவும் சேர்த்து புலந்த்ஷெகர் சிறைக்கு ‘மிகச் சிறந்த தரம் கொண்டது’ என்றும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. உ.பி. சிறைகளில் சைவ உணவு மட்டுமே அளிக்கப்படுகிறது.

காசநோய்க்கு முட்டை: ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் என சிறப்பு உணவு வழங்கப்படுகிறது. மருத்துவரின் பரிந்துரைப்படி காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தினமும் முட்டை வழங்கப்படுகிறது.

ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்றதற்காக புலந்த்ஷெகர் சிறை அதிகாரிகளை, மாநில சிறைத்துறை இயக்குநர் அனந்த்குமார் பாராட்டியுள்ளார். தொடர்ந்து இந்த தரத்தை பேணிக் காக்கும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

உ.பி.யில் உணவுக்காக 5 நட்சத்திர தரச் சான்றிதழ் பெறும் இரண்டாவது சிறை புலந்த்ஷெகர் ஆகும். இதற்கு முன் இதன் அருகிலுள்ள ஃபரூகாபாத் மத்திய சிறை இதே சான்றிதழை கடந்த செப்டம்பரில் பெற்றது.

உ.பி. சிறைகளில் சைவ உணவு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் வழங்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x