Published : 12 Sep 2022 06:15 AM
Last Updated : 12 Sep 2022 06:15 AM
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (செப்.12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா பகுதியில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக்கூடும்.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (செப்.12) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் செப்.13, 14, 15 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை இன்று அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றார்.
மழை அளவு
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 14 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 13 செமீ, கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 செமீ, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, ஹரிசன் எஸ்டேட் செருமுள்ளியில் தலா 6 செமீ, கோயம்புத்தூர் மாவட்டம் சோலையாறில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும்இலங்கை கடற்கரை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதுதவிர, கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த 2 நாள்களுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT