Published : 05 Mar 2022 03:30 AM
Last Updated : 05 Mar 2022 03:30 AM

சென்னை மேயராக ஆர்.பிரியா பதவியேற்பு: துணை மேயராக மு.மகேஷ்குமார் போட்டியின்றி தேர்வு

சென்னை மாநகராட்சி துணை மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மு.மகேஷ்குமாருக்கு மாநகராட்சி ஆனையர் ககன்தீப் சிங் பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். படம்: ம.பிரபு

சென்னை: சென்னை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்ட ஆர்.பிரியா, நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். துணை மேயராக மு.மகேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவிலேயே பழமையானது சென்னை மாநகராட்சி. இது 334 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. கடந்த மாதம் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் 200 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தம் உள்ள 200 வார்டுகளில் திமுக 153 இடங்களிலும், அதிமுக 15 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 4 இடங்களிலும், மதிமுக 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அமமுக ஆகியவை தலா 1 இடத்திலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 2-ம் தேதி ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை மாநகராட்சி மேயர் பதவி எஸ்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேயர், துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல், ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. காலை 9.30 மணிக்கு மேயருக்கான தேர்தலை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து 74-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக உறுப்பினர் ஆர்.பிரியா, மேயர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாதால் ஆர்.பிரியா வெற்றி பெற்றதாக ஆணைர் ககன்தீப் சிங் பேடி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து மேயராக ஆர்.பிரியா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பின்னர், மேயருக்கான அங்கி அணிந்து வந்த பிரியா, மேயர் இருக்கையில் அமர்ந்தார். அவரிடம் ஆணையர் ககன்தீப் சிங் பேடி செங்கோலை வழங்கினார்.

பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயருக்கான மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது 169-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக உறுப்பினர் மு.மகேஷ்குமார், துணை மேயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் துணை மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு துணை மேயராக ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, த.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேயர், துணை மேயர் இருவரும் பதவியேற்ற பின்னர் பேசும்போது, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தனர்.

திராவிட மாடல் ஆட்சி

அமைச்சர் பி.கே.சேகர்பாபு மாவட்டச் செயலராக உள்ள பகுதிக்கு உட்பட்ட வார்டில், கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர் ஆர்.பிரியா. முதல்வர் ஸ்டாலின் தந்த வாய்ப்பு, சேகர்பாபுவின் ஆதரவால் சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்றுள்ளார். இவர் சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயர் ஆவார். பதவியேற்றதும் செங்கோலுடன் மேயர் இருக்கையில் அமர்ந்த பிரியா, அருகில் இருந்த அமைச்சர் சேகர்பாபுவை பார்த்ததும் எழுந்து நிற்க முயன்றார். அவரை இருக்கையில் அமருமாறு புன்னகையோடு சேகர்பாபு கூறினார். அதை பார்த்த வர்கள், இது தான் `திராவிட மாடல் ஆட்சி' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x