Published : 26 Mar 2024 09:08 PM
Last Updated : 26 Mar 2024 09:08 PM

செய்தித் தெறிப்புகள் @ மார்ச் 26: அமெரிக்க பாலம் விபத்து முதல் நடிகர் சேஷு மறைவு வரை

பம்பரம் சின்னம்: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் கெடு: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய விண்ணப்பத்தின் மீது புதன்கிழமை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளனர். திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கேட்டு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது புதன்கிழமை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை புதன்கிழமை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

சரக்கு கப்பல் மோதி பால்டிமோர் நகர பாலம் உடைந்து விபத்து: அமெரிக்காவின் பால்டிமோர் நகரின் பிரான்சிஸ் ஸ்காட் பாலம் மீது சரக்கு கப்பல் மோதியதில், அந்தப் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகளில், பாலத்தின் மீது கப்பல் ஒன்று மோதுவதும், அதனைத் தொடர்ந்து பாலாப்ஸ்கோ ஆற்றின் மீது இருந்த பாரம்பரியம் மிக்க அந்தப் பாலம் ஆற்றுக்குள் சரிந்து விழுவதும் பதிவாகியுள்ளது. 20 பேர் மற்றும் பல வாகனங்கள் ஆற்றுக்குள் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்தன.

“பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்கப் போவதில்லை”: “திமுகவுக்கு தூக்கம் போய்விட்டது என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆமாம், அவர் சொல்வது போல் எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை நாங்கள் தூங்கப்போவதில்லை” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“நான் அரசியலில் விடுமுறை எடுத்ததே இல்லை” - அண்ணாமலை: “அரசியல் கட்சிகளுடன் சண்டை போடுவதற்காக போட்டியிடவில்லை. மாற்றத்திற்காக நான் போட்டியிடுகிறேன். மூன்றாவது முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் குழாய் மூலம் காஸ் விநியோகம் செய்யப்படும்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக “பதிவு செய்யப்பட்டுள்ள எண்கள் அனைத்துக்கும் மூன்று முறை அழைத்து வாக்கு சேகரிக்க வேண்டும்” என்று பாஜக நிர்வாகிகளுக்கு கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் அண்ணாமலை அறிவுறுத்தினார்.

உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்: முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும், ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் வீட்டை முற்றுகையிட முயற்சி: ஆம் ஆத்மி கட்சியினர் கைது: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் டெல்லி படேல் சவுக் மெட்ரோ நிலையத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட முயன்ற பஞ்சாப் அமைச்சரும், ஆம் ஆத்மி பிரமுகருமான ஹர்ஜோத் சிங் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் இருந்து 2-வது உத்தரவைப் பிறப்பித்த கேஜ்ரிவால்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கேஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் சிறையில் இருந்தபடி சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளுக்கான உத்தரவுகளை செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளார். இது அவர் சிறையில் இருந்தபடி பிறப்பிக்கும் இரண்டாவது உத்தரவு என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் கனிமொழி வேட்புமனு தாக்கல்: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழக முதல்வரின் திட்டங்கள், திமுகவின் கொள்கைகள், தூத்துக்குடியில் உள்ள திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் உழைப்பு, எனக்கு இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.

முன்னதாக, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தூத்துக்குடி காமராஜர் மார்கெட் பகுதிகளில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார்.

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 60.

விஜய் தொலைக்காட்சியில் வெளியான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் சேஷு. இதனாலே இவரை ‘லொள்ளு சபா’ சேஷு என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். தொடர்ந்து அவர் சந்தானம், யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.

கடந்த 15-ம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேஷு அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலமானார்.

நடிப்பாற்றல் மட்டுமின்றி இலவச திருமணம், கல்வி, மருத்துவத்துக்காக பலருக்கும் சேஷு நிதியுதவி வழங்கியதை குறிப்பிட்டு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாக். தற்கொலைப் படை தாக்குதல்: 5 சீனர்கள் பலி: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த ஐந்து பொறியாளர்கள் உயிரிழந்தனர்.

முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு போஸ்ட் கார்டு: திருவிடைமருதூர் சட்டப்பேரவை தொகுதியில் முதன்முறையாக வாக்களிக்கவுள்ள வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் அலுவலர்கள் போஸ்ட் கார்டு அனுப்பினர்.

“பிரதமர் பதவி தியாகம் செய்த சோனியா, ராகுல்”:‘சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பிரதமர் பதவியை தியாகம் செய்துள்ளனர்’ என்ற கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “இந்திரா காந்தி குடும்பத்தால் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியை ஒன்றுபடுத்த முடியும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

“சிஏஜி குறிப்பிட்ட அந்த 7.5 லட்சம் கோடி ரூபாய் எங்கே?” - உதயநிதி கேள்வி: “பிரதமர் மோடி தமிழகத்திலேயே தங்கி பிரச்சாரம் செய்தாலும் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.7/5 லட்சம் கோடி கணக்கில் வரவில்லை என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற ஆட்சி நடத்துவதாக கூறும் பாஜக இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

“நாங்கள் எதிர்த்துப் போராட ஒன்றிணைவோம்” - கனிமொழி: “பாஜகவின் ஒவ்வொரு நகர்வையும் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட இந்திய மக்கள் நிச்சயம் பாஜகவைத் தூக்கி எறிவார்கள்” என்று திமுக பொதுச் செயலாளரும், தூத்துக்குடி வேட்பாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் இருந்து கூடுதல் பேருந்துகள்: புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தினசரி இயக்கும் பேருந்துகளுடன் கூடுதலாக கிளாம்பாக்கத்தில் இருந்து மார்ச் 28-ல் 505, மார்ச் 29-ல் 300, மற்றும் மார்ச் 30-ல் 345 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 120 பேருந்துகளும் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x