Published : 20 May 2024 12:09 PM
Last Updated : 20 May 2024 12:09 PM

“வலுவான இந்தியா வேண்டும்” - குடியுரிமை பெற்ற பின் வாக்களித்த நடிகர் அக்‌ஷய் குமார்

நடிகர் அக்‌ஷய் குமார்

மும்பை: மக்களவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள வாக்குப்பதிவு மையம் ஒன்றில் நடிகர் அக்‌ஷய் குமார் வாக்களித்தார்.

கடந்த ஆண்டு அவர் இந்திய குடியுரிமையை பெற்றிருந்தார். அதன் பிறகு முதல் முறையாக தனது ஜனநாயக கடமையை அவர் மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது.

“நமது இந்தியா வளர்ச்சி அடைந்து வலுவானதாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அதை மனதில் வைத்தே நான் வாக்களித்தேன். ஒவ்வொருவரும் தங்களுக்கு யார் சரியானவர் என்ற எண்ணம் வந்தால் அவர்களுக்கு வாக்களிக்கலாம். வாக்குப்பதிவு சதவீதம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். நான் வாக்கு செலுத்தியதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்” என அக்‌ஷய் குமார் தெரிவித்தார்.

அவரை போலவே பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

56 வயதான அக்‌ஷய் குமார், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். முன்னதாக, கனடா நாட்டு குடியுரிமையை அவர் பெற்றிருந்தார். அது சார்ந்து அவர் மீது ஒரு தரப்பினர் விமர்சனம் மேற்கொண்டு வந்தனர். இந்தச் சூழலில் இந்திய குடியுரிமையை கடந்த ஆண்டு அவர் பெற்றார். அதனை கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் (ஆகஸ்ட் 15) போது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x