Published : 20 May 2024 04:48 AM
Last Updated : 20 May 2024 04:48 AM

12 ஆண்டுக்கு முன்பு நிர்பயாவுக்காக போராடினோம்; இப்போது குற்றவாளியை பாதுகாக்க போராடுகிறார்கள்: ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

ஸ்வாதி மாலிவால்

புதுடெல்லி: நிர்பயாவுக்கு நீதி கிடைக்க நாம் போராடினோம், இப்போது குற்றவாளியை பாதுகாக்க போராடுகிறார்கள் என்று ஸ்வாதி மாலிவால் ஆம் ஆத்மி கட்சியினர் மீது குற்றம்சாட்டி உள்ளார்.

டெல்லியில் உள்ள முதல்வர் கேஜ்ரிவாலின் இல்லத்துக்கு ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி சென்றார். அங்கு கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை கொடூரமாக தாக்கியதாக டெல்லி போலீஸில் ஸ்வாதி மாலிவால் புகார் அளித்தார்.

உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்: அதன் அடிப்படையில் பிபவ் குமாரை் டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கவுரவ் கோயல் முன் ஆஜர்படுத்தினார். காவல் துறை கூடுதல் துணை ஆணையர் அன்ஜிதா தாக்கல் செய்த ரிமாண்ட் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஸ்வாதி மாலிவால் எம்.பி. மீதான கொடூர தாக்குதல் உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கலாம். விசாரணையில் மழுப்பலான பதில் அளித்து ஒத்துழைப்பு அளிக்க பிபவ் குமார் மறுக்கிறார். மாஜிஸ் திரேட் முன்பு ஸ்வாதி மாலிவால் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் பிபவ் குமார் தன்னை கடுமையாக திட்டி தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். ஸ்வாதி மாலிவாலின் தலையை பிடித்து இடித்து, அருகில் இருந்த மேஜையில் மோதச் செய்துள்ளார். அந்த அறையில் இருந்த சிசிடிவி காட்சிகள் போலீஸாரிடம் இன்னும் வழங்கப்படவில்லை. பிபவ் குமார், முதல்வர் கேஜ்ரிவாலின் வீட்டில் இருந்தால் அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிடுவார். முதல்வரின் தனி செயலாளர் என்ற பதவிக்காலம் பிபவ் குமாருக்கு கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிந்து விட்டது. ஆனாலும், அவர் தொடர்ந்து முதல்வர் கேஜ்ரிவாலின் வீட்டில் பணியாற்றுகிறார். விரிவான விசாரணை நடத்த பிபவ் குமாரை 7 நாள் போலீஸ் காவலில் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

5 நாள் போலீஸ் காவல்: இந்த மனுவை பரிசீலனை செய்த மாஜிஸ்திரேட் கவுரவ் கோயல், பிபவ் குமாரை் 5 நாள் போலீஸ் காவலில் அனுப்ப உத்தரவிட்டார். இதனிடையே, ஸ்வாதியின் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. அத்துடன் கேஜ்ரிவால் மீது மேலும் ஒரு பொய் வழக்கு பதிவு செய்வதற்காக பாஜகவினர் கூறுவது போல் ஸ்வாதி செயல்படுவதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து ஸ்வாதி மாலிவால் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “டெல்லியில் 12 ஆண்டுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த நிர்பயாவுக்கு நீதி கிடைக்க ஆம் ஆத்மி கட்சி சார்பில் வீதிகளில் இறங்கி போராடினோம். ஆனால் இப்போது என்னை தாக்கியவரை (பிபவ் குமாரை) பாதுகாக்க நம் கட்சியினர் வீதியில் இறங்கி போராடுகின்றனர். நான் தாக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை அந்த நபர் அழித்துள்ளார். அத்துடன் அவருடைய செல்போனில் இருந்த இது தொடர்பான ஆதாரங்களையும் அழித்துள்ளார்.

சிறையில் உள்ள முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை திருப்திபடுத்துவதற்காக என் மீது இவ்வளவு சக்தியை பயன்படுத்தி இருப்பார்கள் என்று கருதுகிறேன். சிசோடியா சம்பவ இடத்தில் இருந்திருந்தால் என் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும்” என பதிவிட் டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x