

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் சட்டப்பேரவை தொகுதியில் முதன்முறையாக வாக்களிக்கவுள்ள வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் அலுவலர்கள் போஸ்ட் கார்டு அனுப்பினர்.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, மயிலாடுதுறை மக்களவைத் தொதிக்குட்ப்பட்ட திருவிடைமருதூர் சட்டப்பேரவை தொகுதியில் முதன் முறையாக வாக்களிக்கவுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அந்தத் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் சுபகமலக்கண்ணன் தலைமையில், டிஎஸ்பி ஒய்.ஜாபர்சித்திக், வட்டாட்சியர் பாக்கியராஜ் மற்றும் அலுவலர்களால் பேனாவால் எழுதப்பட்ட 500 போஸ்ட் கார்டுகளை முதற்கட்டமாக முதல் தலைமுறை வாக்காளர்கள் 500 பேரின் முகவரிக்கு அனுப்பினர்.
மேலும், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீஸார் மற்றும் முதன் முறையாக வாக்களிக்கவுள்ள வாக்காளர்கள் பங்கேற்று இரு சக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 'அனைவரும் கட்டாயமாக வாக்களிப்போம்' என உறுதிமொழி எடுத்துக்கொண்டு திருவிடைமருதூரில் உள்ள வங்கி முன்பு வைத்திருந்த பலகையில் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
இதேபோல் கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, இந்தத் தொகுதி உதவி தேர்தல் அலுவலர்களான கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா, வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன் மற்றும் அலுவலர்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் உள்ளவர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.