Published : 20 Jan 2024 06:18 AM
Last Updated : 20 Jan 2024 06:18 AM

ஆளுநரை வம்புக்கு இழுக்கிறார் ஸ்டாலின்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்

சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதையடுத்து ஜன.19, 20, 21, 22-ம் ஆகிய தேதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களை சுத்தப்படுத்தும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் ராமேசுவரம் செல்லும்போது, அங்கு இளைஞர் அணியினர் தூய்மை பாரதம் நிகழ்ச்சியை நடத்துவார்கள். என்ன தரம் தாழ்ந்த வேலையை ஆளுநர் செய்திருக்கிறார் என்பதை முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட வேண்டும். எந்த குற்றமும் செய்யாத சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் வீட்டில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். எங்கள் பேச்சை கேட்கவில்லையென்றால் இதுதான் நடக்கும் என சேலம் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு திமுக விடுத்த எச்சரிக்கையாக தான் இது இருக்கிறது. ஆளுநரை பயமுறுத்துவதற்காக துணைவேந்தர் மீது காவல் துறையை ஏவிட்டு முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மலிவு அரசியல் செய்வது முதல்வர் ஸ்டாலினா, அல்லது ஆளுநரா என்பதை முதல்வர் ஸ்டாலின் கண்ணாடியில் பார்க்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக வேறு வேலையில்லாமல் ஆளுநரை, முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி வம்புக்கு இழுக்கிறார். தமிழகத்துக்கு பிரதமர் மோடி ஆன்மிக பயணமாக வந்திருக்கிறார்.

எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிரான மக்களின் ஓட்டும், 3-வது முறையாக பிரதமராக மோடி வேண்டும் என்ற எழுச்சியையும் பாஜக சந்திக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

மத வழிபாட்டு தலம் இடிப்பை பற்றி பேச கடைசி தகுதி திமுகவுக்கு தான் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை கோயில்களை இடித்துள்ளனர். ராமர் கோயில் கட்டுவதற்கு இந்தியாவில் அதிகளவில் பணம் கொடுத்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x