Published : 28 Dec 2023 04:58 AM
Last Updated : 28 Dec 2023 04:58 AM
சென்னை: கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின் நூற்றாண்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நூற்றாண்டு விழா மலரையும், கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘பெரியாரும் வைக்கம் போராட்டமும்’ என்ற நூலையும் வெளியிடுகின்றனர்.
கேரள மாநிலம் வைக்கம் மகாதேவர் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து கடந்த 1924-ம் ஆண்டு அங்கு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதை அடுத்து, போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த சூழலில், தடைபடும் நிலையில் இருந்த இப்போராட்டத்துக்கு உயிர்கொடுக்குமாறு பெரியாருக்கு, கேரள போராட்ட தலைவர்கள் கடிதம் எழுதினர். இதை ஏற்று, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற பெரியார், வைக்கம் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார் மக்களிடம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார். மக்கள் திரண்டு ஆதரவு அளித்ததால், போராட்டம் தீவிரமடைந்தது. பெரியார் 2 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, திருவாங்கூர் மன்னர் காலமானதால், அனைவரையும் அரசி விடுதலை செய்தார். பெரியாருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, வைக்கம் தெருவில் நடக்கக்கூடாது என்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. தந்தை பெரியாரின் போராட்டம் மகத்தான வெற்றியில் முடிந்ததால், ‘வைக்கம் வீரர்’ என்று போற்றப்பட்டார்.
சாதி காரணமாக நிலவிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க நடைபெற்ற முதல் போராட்டம் வைக்கம் போராட்டம். எனவே, இந்த போராட்ட வெற்றியின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா இன்று காலை 11.15 மணி அளவில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலரை வெளியிட்டு பேசுகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்று, ‘பெரியாரும் வைக்கம் போராட்டமும்’ என்ற நூலை வெளியிடுகிறார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். வைக்கம் போராட்டம் குறித்துதமிழக செய்தித் துறை தயாரித்துள்ள ஆவணப்படம், விழாவில் திரையிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் சார்பில் சமத்துவ கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT